Thursday, December 31, 2015

திகில் கதை



சென்னை ஹைதராபாத் நெடுஞ்சாலையில் சந்துருவின் சின்ன கார் பயணித்தது.  
காரில் தனியாக பயணித்த சந்துருவுக்கு 42 வயது.  சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்து, கடந்த இருபது வருடங்களில் பல திகில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதியவன். வருடத்திற்கு ஒரு விருது என்று ஏதாவது ஒரு விருது வாங்கும் புகழ் பெற்ற எழுத்தாளன்.   
கார் கொசத்தலை ஆற்றுப்பாலத்தை தாண்டியது. முன் சீட்டில் கிடந்த கைபேசி மணி அடித்தது.
யாரெனப் பார்த்தான். டிஸ்ப்ளேவில்  எடிட்டர் பாலா பெயர் ஓடியது.
ஸ்டியரிங்கை வலது  கையில் பிடித்தபடி இடது கையில் போனை எடுத்தான்.
“சொல்லுங்க சார்” என்றான்.
“எங்க இருக்கீங்க சார்” என்றார் பாலா.
“ஹைதராபாத் ஹைவேல போயிட்டிருக்கேன் சார்”
“அப்ப கதை சார். நேத்திருந்து வெயிட்டிங் சார்” என்றார் பாலா.
“இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள மெயில் பண்றேன். அதுக்காகத்தான் போயிட்டிருக்கேன்” என்றான் சந்துரு.
“சார் உங்க கதைக்காக ஹெவி காம்படிஷன்.. வரப்போற 2016ல  உங்க முதல் கதை எங்க பத்திரிக்கையில வர்றது எங்களுக்கு பெருமை சார்” என்று பாலா சொல்லி போனை வைத்தார் அந்த வாரப்பத்திரிக்கையின் எடிட்டர் பாலா. சந்துருவின் கதை இருந்தால் விற்பனை சில லட்சங்கள் எகிறும் என்பதால் சந்துருவிற்கு பலத்த போட்டி.  


சந்துருவிற்கு வீட்டில் அமர்ந்து எழுதும் பழக்கம் இல்லை. ரசிகர் கூட்டம் அதிகம். இவன் வீட்டில் இருப்பது தெரிந்தால் வந்துவிடுவார்கள். அதனால்  ஊர் சுற்றியபடியே எழுதுவது அவனது வழாக்கம். கார் திருப்பதி க்ராஸ் ரோடைத்தாண்டி சென்றது. ஏதாவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்த்தபடியே வந்தான். ஐந்து கிலோ மீட்டர் தாண்டி, வெறும் காடுகளும் மரங்களும் அமைந்த  ரோட்டின் வலதுபுறம் சரவணா ஹோட்டல் என்ற ஒரு சிறிய ஹோட்டல் தென்பட்டது.
காரை அந்த ஹோட்டல் முன் நிறுத்தினான்.  
சிறிய விடுதி ஆனாலும் பார்க்க சுத்தமாக இருந்தது.
ரிசப்ஷனில் இருந்த இரு வாலிபனுக்கு  வயது இருபது இருக்கும்.   
“வாங்க சார்.. சிங்கிள் ரூம் டபுள் ரூம் டீலக்ஸ் ரூம்,  ஏசி , நான் ஏசி.. எந்த ரூம் வேணும் சார்” என்று ஹோட்டல் சர்வர் போல ஒப்பித்தான் ஒரு பையன். அவனது ஆர்வத்தைப் பார்த்தால், பல நாட்களாக ஹோட்டலுக்கு கிராக்கி இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. நமக்கு வேண்டியது இது போன்ற ஆளில்லாத இடம்தான் என்று முடிவு செய்து கொண்டு “காத்தோட்டமா இருக்கிற மாதிரி  ஒரு சிங்கிள் ரூம்” என்றான் சந்துரு.
“சூப்பர் ரூம் இருக்கு சார்” என்றவன், ஒரு 15 வயது பையனை அழைத்து “டேய், சாருக்கு மாடியில ரைட் சைட் கார்னர்ல இருக்கற ரூம காட்டு” என்பது.   
ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கட்டிவிட்டு, மனைவி  போன்  செய்தால் முகவரி சொல்வதற்காக ஹோட்டல் விசிட்டிங் கார்டு ஒன்றையும் கேட்டு வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.
பையன் “வாங்க சார்” என்று அழைத்துச் செல்வது.
ரூம் சந்துரு எதிர்பார்த்தது போலவே காற்றோட்டம் வெளிச்சம் எல்லாம்  அமையப்பெற்று இருந்தது.


சந்துரு ஜன்னல் கதவுகளை திறந்துவிட சில்லென்று காற்று வீசியது. கண்ணுக்கெட்டிய  தூரம் வரை மரங்கள். பார்க்க ரம்மியமாக் இருந்தது. இனி அடிக்கடி இங்கு வரவேண்டு என்று நினைத்துக்கொண்டான்.   
படுக்கையில் அமர்ந்து தனது லேப்டாப்பை திறந்தான்.
தண்ணீர் கொண்டு வந்த சிறுவன் தயங்கி தயங்கி “சார்.. நீங்க எழுத்தாளார்  சந்துரு  தான” என்றான்.
“ஆமாம்ப்பா..” என்றான் சந்துரு.
“நேத்து டிவில பார்த்தேன்  சார், உங்க கதை எல்லாம் ரொம்ப பிடிக்கும் சார்” என்று சொன்னான்.
“ஒரு போட்டோ சார்” என்று கேட்க, “தம்பி, போறப்போ எடுத்துக்கலாம். நான் இப்ப எழுதணும். யார் கிட்டயும் நான் யாருன்னு சொல்லாத என்ன” என்று சொல்ல, அவன் சம்மதமாக தலையாட்டிச்  சென்றான்.


சந்துரு வரி வரியாக டைப் அடித்து பின்னர் அழித்தான். எந்த யோசனையும் வரவில்லை. சிறப்புச்  சிறுகதை. சிறந்ததாக வரவேண்டுமே என்ற டென்ஷனுடன் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். சட்டென ஒரு யோசனை வந்தவனாக அமர்ந்து யோசனை மறந்து போவதற்குள் முடிக்க வேண்டும் என்றவாறு வேகமாக டைப் அடிக்க துவங்கினான். பின்னர் படித்துப்பார்த்தான்.


கதை
இரவு. ரவி தனியாக அந்த பாதையில் நடந்து வந்தான். கும்மிருட்டு. தூரத்தில் ஒரு விளக்கு கம்பத்தின் கீழ் ஒரு பெண் தனது ஸ்கூட்டியுடன் நின்றிருந்தாள் . ரவி பார்த்தான். அந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் மிக அழகாக காட்சியளித்தாள். அவள் சுற்றும் முற்றும் பயம் கலந்த பார்வையுடன் பார்த்தாள். ரவி இருட்டிலேயே, தலை முடியை சரி செய்துகொண்டு அவளை நெருங்கினான். அவள் இவனை பயத்துடன் பார்த்தாள்.
“என்ன ஆச்சு” என்று ரவி கேட்க,
“வண்டி ரிப்பேர் சார். சாப்ட்வேர் ஆபீஸ்ல வொர்க் பண்றேன். நைட் டியூட்டி. வீடு பகவான் காலனி.   இந்த வழில போனா சீக்கிரம் போயிடலாம்னு வந்தேன். இப்போ என்ன பண்றதுன்னே தெரியல. பயமா இருக்கு. என்னை எங்க வீடு வரைக்கும் கொண்டு போயி விடுறீங்களா ப்ளீஸ்” என்றாள்.   
அவள் கழுத்தில் மஞ்சள் கயிறோ காலில் மெட்டியோ இருக்கிறதா என்று ரவி பார்த்தான். இல்லை. ஆஹா திருமணம் ஆகாத பெண். இப்ப  ஹெல்ப் பண்ணா இவ மனசுல இடம் புடிச்சிடலாம். கடவுள் தனக்காகவே இப்படி ஒரு அழகிய இங்க நிக்க வெச்சிருக்கார் என்று நினைத்தபடி
“கவலைப்படதீங்க.. நான் உங்க கூட வர்றேன். உங்க காலனிய தாண்டித்தான் நான் போகணும் ” என்றான்.  
அவள் முகத்தில் மகிழ்ச்சி ரேகை பரவ, அதைப்பார்த்த ரவி மனதில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டான்.
நின்று போன அவளது ஸ்கூட்டியை ரவி தள்ளியபடி நடக்க, அவள் கூட நடந்தாள்.
மின் விளக்கு வெளிச்சத்தில் தென்பட்ட அவளது நிழலை தனது நிழலால் தொட முயன்றபடி நடந்தான் ரவி.
இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.  ரவிக்கு அவள் சொல்வது எதுவும் காதில் விழவில்லை . அவள் உதட்டழகையே  பார்த்தபடி  நடந்தான்.
“டேய்” என்ற ஒரு ஆண் கத்தும்  சத்தம் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர்.  
சற்று தூரத்தில் இருந்து ஒருவன் இவர்களை நோக்கி  ஓடி வந்தான்.  வாயில் பான்பராக்கும் முகத்தில் தாடியும் வைத்த அவனைப்பார்க்கவே ரௌடி போல இருந்தான். அவள் பயந்தபடி ரவியைப் பார்த்தாள்.
“பயப்படாதீங்க.. நான் இருக்கேன்” என்று தைரியம் சொன்ன ரவி திரும்பி எதிரே வருபவனை கண்ணுக்கு நேராக பார்த்தான்.
அவன்  அருகே வந்தான்.
ரவி  அவனைத்தாக்க தயாரானான்.
“என்னடா.. என் சைக்கிள திருடிட்டு.. என்னையே அடிக்க ரெடியாயிட்டியா” என்று ஸ்கூட்டி இருந்த இடத்தைப் பார்த்தபடி சொன்னான் அவன்.
“சைக்கிள திருடிட்டனா”  என்று புரியாமல் கீழே பார்த்த ரவி அதிர்ந்தான்.
ஸ்கூட்டி இருந்த கையில் சைக்கிள் இருந்தது.
“என்னங்க.. என்னது உங்க ஸ்கூட்டி.. சைக்கிலாயிடுச்சு” என்று சொல்லியபடியே அவளை பார்க்க.. அங்கு அவள்  இல்லை .
ரவிக்கு வேர்த்தது.
“என்னடா யோசிக்கற” என்றான் சைக்கிள்க்காரன் சைக்கிளை தன பக்கம் இழுத்துக்கொண்டபடி.  
அதிர்ந்த ரவி .. “இல்ல.. இங்க பொண்ணு” என்று சொல்ல..
“திருடிட்டு வந்துட்டு.. என்னடா உளர்ற” என்று ரவியை அவன் அடிக்க துவங்கினான்.


கதை அங்கு முடிந்தது.
எழுதியவரை திருப்தியுற்றவனாக சந்துரு எழுந்து  நடந்தான், யோசித்தான். அமர்ந்தான். மீண்டும் கதையை தொடர்ந்து  டைப் அடிக்க துவங்கினான்.


கதையில்..
சைக்கிள் திருடி அடி வாங்கிய அடுத்த நாள் மதியம் கொளுத்தும் வெயிலில்  ரவி தனது ஸ்கூட்டரில்   சென்றுகொண்டு இருந்தான்.  தாகமாக இருந்தது. ரோட்டோரம் ஒரு இளநீர் கடை  தென்பட்டது. ரவி ஸ்கூட்டரை நிறுத்தி ஒரு இளநீர் வாங்கினான். ஸ்ட்ரா வேண்டாம் என்று சொல்லி அண்ணாந்து குடித்தான். குடித்தபடியே பார்க்க, எதிரே சிலர் ரவியையே பயமாக பார்த்தனர்.
“என்ன” என்றபடி ரவி இளநீரை முகத்தின் முன் இருந்து நகர்த்தி பார்க்க, அவர்கள் ரவியின் கையையே பார்த்தனர்.
“என்னங்கடா” என்று ரவி  தனது கையைப் பார்க்க கையில் ஒரு பெரிய கல் இருப்பது.
அதிர்ச்சியில் ரவி கல்லைத் தூக்கி  வீச, “டேய்.. பைத்தியம்டா .. கல்லத்தூக்கிப்போட்டு கொல்லப்பார்க்கறான்”  என்றபடி அவர்கள் ஓட்டம் எடுப்பது.


டைப் அடிப்பதை நிறுத்திய சந்துரு பாலாவிற்கு போன் செய்வது.
பாலா போனை எடுக்க “பாலா சார்.. கதை ரொம்ப நல்லா வருது. கிட்டத்தட்ட முடியப்போகுது” என்று எழுதியவற்றை அலைன்  செய்தபடியே பேசினான்.
பாலா, “அப்படியா, சூப்பர் சார்.. நானும் ரெட் ஹில்ஸ் வரைக்கும்  ஒரு வேலையா வந்தேன். எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நீங்க கதைய முடிக்கறதுக்குள்ள வந்துடறேன். ஏதாவது ஒரு டாபால சாப்புடுவோம். உங்க கூட லன்ச் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு” .
சிரித்தபடியே சந்துரு “ஹைவேல திருப்பதி க்ராஸ் ரோடு தாண்டி அஞ்சாவது கிலோமீட்டர்ல ரைட் சைட் ஒரு சின்ன ஹோட்டல் சார். பேரு..” என்று தனது சட்டைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்து “ஆஹ்.. சரவணா ஹோட்டல்” என்று சொல்ல, எதிர் முனையில் பாலா அதிர்ச்சியடைவது.
“சரவணா ஹோட்டலா” என்று சந்தேகமாக கேட்பது.
“ஆமாம் சார் “ என்றான் சந்துரு.
“சுத்தியும் சவுக்கு மரங்கள் இருக்குமே ”
“ஆமாம் சார்.. ரம்மியமா இருக்கு” என்றான் சந்துரு.
“சார்.. அந்த ஹோட்டல் ரெண்டு மாசத்துக்கு முன்னால அங்க தங்கியிருந்த தீவிரவாதிகள் வெச்சிருந்த பாம் தவறுதலா வெடிச்சு, மொத்தம் தரை மட்டமாயிடுச்சே சார்” என்று பாலா பதட்டமாக சொல்ல
“இல்ல சார்.. பில்டிங் புதுசா இருக்கு” என்றபடி சந்துரு தனது லேப்டாப்பில் இருந்து தலை எடுத்து பார்க்க எதிரே இருந்த சுவரைக்காணாமல் அதிர்வது. சுற்றியும் பார்க்க.. மரங்கள்.. மரங்கள்.. மரங்கள்..  ஒரு பக்கம் நெடுஞ்சாலை.
கையில் இருந்த செல்போன் நழுவி கீழே விழுவது.  
“அப்ப நான் உட்கார்ந்துட்டிருக்கற கட்டில்” என்று நடுக்கமாக தனக்குத்தானே பேசியபடி பயமாக கீழே பார்க்க, இடிந்து போன கட்டிடத்தின் நடுவே உள்ள ஒரு மரத்தின்  கிளையில் அவன் அமர்ந்திருக்க, எதிரே உள்ள கிளையில் லேப்டாப் இருப்பது.
சரவணா ஹோட்டல் என்ற விசிட்டிங் கார்டு மட்டும் அவன் கையில் இன்னும் படபடப்பது.  

முற்றும்   

Sunday, December 20, 2015

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 5


MARS  என்று கொட்டை எழுத்துக்கள்  பொறிக்கப்பட்ட அந்த பெரிய கட்டிடத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே  வரிசையில் நின்றிருந்தனர். இது நேர்முகத் தேர்வு. உலகின் பல மூலைகளில்  இருந்தும் மார்ஸ்  செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமானிய மக்கள் அவர்கள். மொழி, இனம், நிறம் வேறுபாடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு இது கடைசி தேர்வு. இங்கு வெற்றி பெற்றால் அடுத்து நேராக மார்ஸ் தான். எல்லா செலவையும் International Mars Organisation  ( IMO ) ஏற்றுக்கொள்ளும். அனைவரது முகத்திலும் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் காணப்பட்டது.  
முதன் முதலில் மார்ஸில் மனிதன் வசிக்க முடியும் என்று நூறு வருடங்களுக்கு முன்னர் கண்டு பிடித்தனர். ஆனாலும் கண்டுபிடித்த பல வருடங்களுக்கு மனிதனால் அங்கு செல்ல முடியவில்லை . தயாரிக்கப்பட்ட  ராக்கெட்டுகள் எல்லாம் ஒரு வழிப்பாதைக்கானவை. செல்லலாம். வரமுடியாது. பல போராட்டங்களுக்குப் பிறகு, பூமியில் இருந்து மார்ஸ் வரை சென்று, மீண்டும் பூமிக்கு திரும்பும் ராக்கெட் 2026 ம் ஆண்டு தயாரிக்கப்பட,  பூமியில் இருந்து சுமார் 225 மில்லியன்  கிலோ மீட்டர்கள் தொலைவை  257 நாட்களில் கடந்து விஞ்ஞானிகள் X மற்றும்  Y முதன் முதலில் மார்ஸில் கால் பதித்தனர்.
அதன் பின்னர் உலகில் உள்ள ஒரு சில  பெரும் பணக்காரர்கள் மட்டும்  கோடி கோடியாய் செலவழித்து மார்ஸ் சென்று வந்தனர். சாதாரண மக்களுக்கு மார்ஸ் என்பது எட்டாக் கனவே. ஆனால் இப்பொழுது காலம் கனிந்து சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பு அளிக்க முன் வந்ததுள்ளது IMO.  
வரிசையில் நின்றிருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் ஒரு அதிகாரி ,
“ வணக்கம்.  நீங்க எல்லாரும்  பல நாடுகள்ல இருந்து வந்திருக்கறீங்க. ஏன் எப்பவுமே விஞ்ஞானிகள் தான் வேற்று கிரகத்துக்கு போகணுமா, சாதாரண மக்கள் போககூடாதான்னு யோசிச்சப்பத்தான், எங்களுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. மனுஷ வாழ்வுக்காக பாடு படற மனுஷங்கள அனுப்பணும்னு. இந்த உலகத்துல  ஒரு விஞ்ஞானி இல்லாமையோ, ஒரு மருத்துவன் இல்லாமையோ, சாப்ட்வேர் இஞ்சினியர் இல்லாமையோ போனாலும் கூட வாழ்ந்துடலாம்.  ஆனா  ஒரு விவசாயி இல்லாம,  உடை தயாரிக்கறவர் இல்லாம, கொத்தனார் இல்லாம வாழ முடியாது.  கொடுமை என்னன்னா கிட்டத்தட்ட 1500 கோடிப்பேர் வாழற இந்த உலகத்துல,  மனுஷ வாழ்க்கைக்கு முக்கியமான இந்த மூணும் தெரிஞ்சவங்க ஒரு பெர்சன்ட் தான். அவங்கள நம்பித்தான் மிச்ச 99 பெர்சென்ட்டும் வாழுது.  அந்த ஒரு பெர்சென்ட்  இல்லேன்னா இந்த பூமில மனுஷ வாழ்க்கை இல்லன்னு தெரிஞ்சும் , அவங்கள  அடிமட்ட  நிலையிலயே வெச்சிருக்கு இந்த அதிகார வர்க்கம். அதனால்தான் அந்த ஒரு பெர்சென்ட்ட  சேர்ந்தவங்கள கௌரவிக்கற விதமா , உங்கள தேர்ந்தெடுத்திருக்கோம்.  நீங்க போக எட்டு மாசம் ஆகும். அங்க ரெண்டு மாசம் தங்க வைக்கப்படுவீங்க. அப்புறம் எட்டு மாசத்துல திரும்ப கூட்டிவரப்படுவீங்க. மொத்த செலவும் எங்களோடது ” என்று சொல்ல, அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.   
பின்னர் அவர் , “  இப்போதைக்கு ஆயிரம் பேரை அனுப்பற வசதி மட்டும் இருக்கறதால, உங்கள்ல ஆயிரம் பேரை மட்டும் தேர்ந்தெடுக்க, ஒரு சோதனை வைக்கப்போறோம். சோதனைக்காலம் ஆறு மாசம். நீங்க இங்கயே தங்கி, எங்க நிலத்தில விவசாயம் செய்து காட்டணும். துணி நெய்து காட்டணும்.  வீடு கட்டி காட்டணும் “ என்றார்.
அடுத்த ஆறாவது மாதத்தில், ஒவ்வொரு தொழிலிலும் சிறந்து விளங்கியவர்களில் ஆண்களும் பெண்களுமாக சேர்த்து  மொத்தம் ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  
அடுத்த இரண்டாவது நாளில் உலக பிரதமர்கள், அனைவரது முன்னிலையில் அந்த அதிர்ஷ்டக்காரர்கள் ஆயிரம் பேரும் ராக்கெட் ஏறினர்.
அடுத்த எட்டாவது மாதத்தில் அவர்கள் மார்ஸில், ஒரு பனிமலை அருகில் தரை இறக்கப்பட்டனர்.   
அவர்களை அழைத்துச்சென்ற ராக்கெட்டில் இருந்து, அவர்களுக்கு சில மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அளிக்கப்பட்டது.  
புதிய உலகத்தில் கால் வைத்த மகிழ்ச்சி அனைவருக்கும்.
ராக்கெட்டில் இருந்த ஒரு ரோபோ அவர்களிடம் , “ நீங்கள் இங்கு சுற்றிப்பாருங்கள். இரண்டு நாள்
கழித்து வந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி ராக்கெட்டை கிளப்பியது.
இரவில் குளிரடிக்க, அனைவரும் உடை மீது உடையணிந்து குளிரை தாங்கிக்கொண்டனர்.
இரண்டு நிலவுகள் தோன்றியதை வாய் பிளந்தபடி  பார்த்தனர்.
கொண்டு சென்ற உணவுப்பொருட்களைக் கொண்டு அனைவரும் பசியாறினர்.   
இரண்டு நாட்கள் ஆனந்தமாக கழிந்தது.
ஆனால் ராக்கெட் வரவில்லை. இரண்டு நாள் இரண்டு மாதங்கள் ஆனது. ராக்கெட் வரவில்லை.  
கொண்டு வந்த உணவுப்பொருட்கள் குறைய, விவசாயிகள் விவசாயம் செய்ய தகுந்த நிலம் தேடினர் .
குளிரையும் சூட்டையும் தாங்க முடியாமல், வீடுகள் கட்டினர். உடைகள் கிழிந்து போக, கிடைத்த பொருட்களைக்கொண்டு உடைகள் தயாரித்தனர்.
ஒண்ணரை வருடங்கள் ஓடியது. பூமியில் உலக நாடுகள், மார்ஸில் இருந்து திரும்பும் மக்களுக்காக காத்திருந்தது. அவர்கள் கிளம்பிய நாள் முதல், இன்று இத்தனை கிலோமீட்டரை கடந்து இருக்கிறார்கள் என்று நாளும் உலகத்துக்கு சொல்லி வந்தது IMO. மார்ஸில் இறங்கிவிட்டார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று, சோதனைக்காக ஆறுமாதங்கள் தங்கியிருந்தபொழுது எடுத்த புகைப்படங்களை காட்டி ஏமாற்றி வந்தது. இன்னும் சில நாட்களில் வந்துவிடுவார்கள் என்று செய்தி வெளியிட்ட மறு நாள், ராக்கெட்  பூமியில் இருந்து லட்சத்தி முன்னூறாவது கிலோ மீட்டரில்  எஞ்சின் கோளாறால் வெடித்துச் சிதறியது என்ற செய்தியை கண்ணீரோடு சொன்னார் IMO தலைவர்.
உலகம் நம்பியது.  அழுதது.
உலகத்தை நம்பவைத்த தலைவர் தன குழுவுடன் அறையில் அமர்ந்திருந்தார்.
அவர்கள் எதிரே இருந்த திரையில் மார்ஸில் மக்கள், ராக்கெட் வராது என்பதனை புரிந்துகொண்டவர்கள் போல விருப்பமானவர்களுடன் வாழத்துவங்கிவிட்ட காட்சிகள் ஓடத்துவங்கியது.
தலைவர் , “இந்த உலகத்த நம்ப வெச்சுட்டோம்.  இன்னும் ஆறு மாசத்துல நம்ம குழு, அவங்கவங்க குடும்பத்தோட  கிளம்பணும். அதுக்குள்ளே அங்க, நம்ம அடிமைங்க  நமக்கான உலகத்த உருவாக்கியிருப்பாங்க” என்று சிரித்தார்.  
ஆறு மாதங்கள் கழித்து ஒரு நள்ளிரவில், IMO தலைவர் மற்றும் சிலரது குடும்பங்கள் ரகசியமாக ராக்கெட்டில் மார்ஸ் கிளம்பினர்.
சரியாக பூமியில் இருந்து லட்சத்தி முன்னூறாவது கிலோ மீட்டரில், ராக்கெட்  எஞ்சின் கோளாறால் வெடித்துச் சிதறியது.   
மார்ஸில், உணவுக்காகவும், உடைக்காகவும், பெண்களுக்காகவும் அடித்துக்கொண்டு சில காலம் கடந்த பின்னர், அவர்களுக்குள் ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டனர். பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர் . பல்வேறு மொழிகளைக் கொண்டவர்களாதலால், அனைத்து மொழிகளையும் கலந்து ஒரு மொழியையும், எழுத்துருவையும்  உருவாக்கினர்.
அன்றில் இருந்து சரியாக ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்,  மார்ஸில்  ஒரு ஆரம்ப பள்ளியில் , வரலாற்று ஆசிரியை பாடம் நடத்தினார் .
“நம்ம மார்ஸ் உருவாகி பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனதாகவும் , மனித வாழ்க்கை  துவங்கி ஆயிரம் ஆண்டுகள் ஆச்சுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. முதல் மனிதன கடவுள் மண்ணுல இருந்து உருவாக்குனதா மதங்களும் , ரசாயன துகள்கள் சேர்ந்து உருவானதாக விஞ்ஞானிகளும் சொல்லிக்கறாங்க “ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் அங்குள்ள Space research centre  தலைவர், சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடித்த டிவி என்னும் சாதனத்தில் ஆனந்தமாக உரையாடினார். அதில்  “ வர வர நம் கிரகம் மாசடைந்து விட்டது. மக்கள் தொகை பெருகிவிட்டது. நம் மக்களை  குடியேற்ற புதிதாக ஒரு கிரகத்தை பல வருடங்களாக தேடி வந்தோம். இன்று அதனை கண்டு பிடித்து விட்டோம். இங்கிருந்து சரியாக 255 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில், 257 நாட்கள் பயணத்தில் அது அமைந்துள்ளது. அதற்கு எங்கள் ஆராய்ச்சிக் குழு பூமி என்று பெயர் வைத்துள்ளது” என்றார் .    

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 4


அது ஒரு பெரிய மருத்துவமனை.
வீர் அப்பாவுடன் டாக்டர் முன் அமர்ந்திருந்தான். டாக்டருக்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும்.
அப்பாவை சோதித்தார்.
“நோ ப்ராப்ளம். நல்லா இருக்கீங்க” என்றார் டாக்டர்.
“அப்ப scanning எப்போ வெச்சுக்கலாம் டாக்டர் ” என்று ஆவலுடன் கேட்டான் வீர்.    
டாக்டர் “நாளைக்கே கூட வெச்சுக்கலாம். 24 மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கணும். எதுவும் சாப்பிட கூடாது. நீங்க காலைல ஆறு மணிக்கு வந்துருங்க” என்றார்.  
அப்பாவும், வீரும் சரி என்று தலையாட்டிவிட்டு கிளம்பினர்.  
வீர் இன்னும் கொஞ்ச காலம் சென்ற பின்னர் ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம் என்று தான் சொன்னான். ஆனால் அவனது அப்பாதான், எடுக்கவேண்டும் என்றால் உடனடியாக எடுத்துக்கொள் என்றார். அவருக்கு இருதயத்தில் பிரச்சனை. எப்பொழுது வேண்டுமானாலும் அது துடிப்பை நிறுத்திக்கொள்ளலாம்.  
வீருக்கு அப்பா என்றால் கொள்ளைப் பிரியம். இந்த காலத்தில் இது பலருக்கு ஆச்சர்யமான விஷயம்தான். இப்பொழுதெல்லாம் அப்பாவையும் அம்மாவையும் எல்லோரும் பேர் வைத்து தான் கூப்பிடுகிறார்கள்.  ஒருவர் இறந்துவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொபைல்  தகன மேடை வீட்டிற்கே வந்துவிடும். குளிர் சாதன பெட்டி போன்ற அதில் இறந்தவரை படுக்கவைத்து மின் இணைப்பிற்கான சுவிட்சை அழுத்திய அறுபதாவது நொடியில், உள்ளே இருந்த உடல் காற்றில் கரைந்துவிடும். பெட்டியை திறந்ததும் அதில் ஒரு மனிதனை வைத்ததற்கான அடையாளமே இருக்காது.  சென்ற நூற்றாண்டை போல, சில எலும்புகளையும் சாம்பலையும் எடுத்து வைத்து கரைக்க ஆறுகள் இல்லை. கடலில் கரைக்க அனுமதி இல்லை.
நூறாண்டுகளுக்கு முன்னர் ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவரது நினைவாக, புகைப்படங்களும் வீடியோவும் மட்டுமே இருந்தனவாம்.
அதன் பிறகு, சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், மனிதனின்  மூளையை ஸ்கேன் செய்து, அவனது   பேசும் முறைகள், எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வான், என்று அவன்  பிறந்தது முதல் இந்த நொடி வரை எடுத்த முடிவுகள், நடந்து கொண்ட முறைகளை பதிவு செய்து கொண்டு, அந்த மனிதரின் இறப்புக்கு பின்னர் அதனை ஒரு சாப்ட்வேரில் பதிவு செய்து கொடுத்தனர். குடும்பத்தினர்  அந்த சாப்ட்வேரை கம்பியூட்டரில் வைத்துக்கொண்டு, எப்பொழுது அந்த இறந்த மனிதருடன் பேச தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் பேசுவார்கள். அந்த கம்பியூட்டரும் அந்த மனிதர் இருந்திருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பாரோ அதே பதிலை அவரது குரலிலேயே தந்து வந்தது.
இப்பொழுது ஒருபடி மேலே போய், ஒரு மனிதனை ஸ்கேன் செய்து, பேப்பரை பிரதி எடுப்பது போல   பிரதி எடுத்து வைத்துக்கொள்கிறார்கள் . ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர் மறைந்த பின்னர் இந்த ரத்தமும் சதையுமான பிரதி அவர்களுடன்  வாழும். அந்த மனிதர் இறந்துவிட்டார் என்ற நினைப்பே  வராது.  
அதற்காகத்தான் வீர் அவனது அப்பாவை நாளை பிரதி எடுக்க போகின்றான் .
காலை சரியாக ஆறு மணிக்கு வீர் அப்பாவுடன் மருத்துவமனையை அடைந்தான்.
அப்பாவை பெரிய சூட்கேஸ்  போன்ற ஒரு ஸ்கேனரில் படுக்கவைத்தனர். வெளியே இருந்து டாக்டர்கள் கேள்விகள்  கேட்க, அப்பா உள்ளே இருந்தே பதில் சொன்னார். கேள்விகள் அவரது குழந்தைப்பருவம் முதல் இன்று வரை அவரது வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டவையாக இருந்தன. சிறு வயது நண்பர்கள், படிப்பு, வேலை, வாழ்க்கை துணைகள் , அம்மாவைப் பிரிந்தது, சுகம், துக்கம், கோபம் என்று பல கேள்விகள். பதில் அளித்த பொழுது அவரது முக பாவங்கள், பேசும் விதம் எல்லாம் பதிவுசெய்யப்பட்டது.
அதன் பின்னர்,  ஒரு தூக்க மாத்திரை கொடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தி, அவரது உள்  மனம் பதிவு செய்யப்பட்டது. ஒரு மனிதனின் உள்  மனதுதான்  யாருக்கும் தெரியாமல் மனிதன் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் எல்லாம் தங்குமிடம். அது உறங்கும் பொழுது மட்டுமே விழித்திருக்கும்.  அந்த உள்மனதை கிரகித்து ஒரு கருவி காப்பி எடுத்துக்கொண்டது.  
இப்படியாக ஒரு நாள் முழுவதும் அவர் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அனுப்பப்படார்.
அடுத்த ஒரு வாரத்தில் வீரும் அப்பாவும் ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு அப்பா மட்டும் உள்ளே அழைக்கப்பட, வீர் வெளியே காத்திருந்தான். சற்று நேரம் கழித்து வீர் உள்ளே அழைக்கப்பட, உள்ளே சென்றவன் ஒரு கணம் சிலையாகி நின்றான். அங்கே அவனது அப்பா இருவராக இருந்தார். அது ஒரு விசாலமான அறை. இவனுக்கு எதிரே ஐந்தடி தூரத்தில் சுவற்றோரம் அப்பாக்கள் மௌனமாக நின்றிருந்தனர். ஒரே உடை இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. யார் உண்மையான அப்பா, யார் பிரதி எடுக்கப்பட்ட அப்பா என்று  கொஞ்சம் கூட வித்யாசம் கண்டுபிடிக்க முடியாதவாறு இருவரும் இருந்தனர்.   
அங்கிருந்த டாக்டரிடம் , “ டாக்டர், இதுல யாரு எங்க அப்பா” என்று வீர் கேட்ட அடுத்த நொடி ,
“நாந்தான்ப்பா உங்க அப்பா” என்று இரு அப்பாக்களும் ஒரே சுதியில் பதில் அளித்தனர்.
வீர் ஆச்சர்யமாக் டாக்டரைப் பார்க்க, டாக்டர் புன்னகையோடு “ நீங்க இன்னும் சில கேள்விகள் கேட்டு சோதிச்சு, திருப்தியடைஞ்சதா சொன்னா மட்டும்தான் நாங்க உங்களுக்கு பிரதி அப்பாவ தருவோம், இல்லேன்னா சரி செஞ்சு தருவோம்” என்றார்.
வீர் அப்பாக்களைப் பார்த்தான்.
“எப்படி இருக்கீங்கப்பா” என்றான்.
“நல்லா இருக்கேன்ப்பா” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
“உங்க ஊர் எதுன்னு சொன்னீங்க, மறந்துட்டேன் ” என்றான்.
“சின்னவேடம்பட்டிப்பா ” இருவரும் சொன்னார்கள்.
“உங்களுக்கு சின்ன வயசுல ஒரு அடிபட்டுச்சே, அந்த தழும்பு இன்னும் இருக்கில்ல ” என்று கேட்டவுடன், இரண்டு அப்பாக்களும் உடனடியாக அவர்கள் மேலாடையை கழற்றி,  திரும்பி நின்று, வலது தோள்பட்டையில் முதுகில் இருந்த அந்த ஒரு சென்டிமீட்டர் அளவுள்ள தழும்பை காட்டினர்.
வீர் அதோடு சேர்த்து அப்பாக்களின் பின் கழுத்தில் இருந்த கடுகளவு மச்சத்தையும் கவனித்தான்.
“வீட்டுக்கு போலாமாப்பா ” என்றதும், “போலாம்ப்பா” என்று இரு அப்பாக்களும் சொல்லி, முன்னே அடியெடுத்து வைத்தனர்.
ஆனால் டாக்டர் வீரிடம் ஒரு மனிதர் இறக்கும் வரை இந்த பிரதி அப்பாவை தர முடியாது என்று சொல்ல, வீர் சரி  என்று தன்  அப்பாவுடன் கிளம்பினார்.  அப்பாவுக்குத்தான் அவரது பிரதியை விட்டு வர மனமே இல்லை .
“எப்படி அச்சு அசலா என்னை மாதிரியே இருக்கானில்ல,  வீர் , நான் போனதுக்கப்புறம் அவனையும் நீ நல்லா கவனிச்சுக்கணும் டா.  நான் இல்லேங்கற நினைப்பே உனக்கு வரக்கூடாது . நான்தான் அவன். அவன்தான் நான்” என்று சொல்லியபடியே வந்தார்.
சில மாதங்களில் அப்பா இறந்துவிட, அவர் இறந்த ஒரு மணி நேரத்தில் பிரதி அப்பா வீடு வந்து சேர்ந்தார். அப்பாவை பிரிந்து எப்படி வாழப்போகிறேன் என்று பயந்த வீருக்கு, அப்பா இறந்ததே ஒரு கனவு போலத்தான் இருந்தது. பிரதி அப்பா, உண்மையான அப்பா போலவே அவனுடன் பழகினார்.     
சாதாரணமாக மனிதன் சுவாசித்து உயிர் வாழ்வது போல, பிரதி எடுக்கப்பட்ட மனிதர்கள் சூரிய சக்தியில் இருந்து மின் சக்தியை எடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள். இரவு நேரத்திற்காக , அவர்கள்  உடலில் அமைக்கப்பட்ட தோலில் அமைந்துள்ள Inverter cellகளில் மின் சக்தி தேக்கி வைக்கப்படும்.
அவர்களுக்கும் மனிதர்களுக்கு ஒரே ஒரு வித்யாசம், அவர்களுக்கு உணவும் டாய்லெட்டும் தேவையில்லை.  
வீர் பிரதி அப்பாவுடன் வெளியே சென்றான். விளையாடினான். அவர் ஏரோகாரோட்ட வீர் தூங்கியபடியே பிரயாணித்தான். அடிக்கடி கட்டியணைத்து முத்தம் கொடுத்தான்.
அவருக்கு நோய் வராது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவரது இதயம் துடிக்கின்றதா, நின்றுவிட்டதா என்று பயந்து பயந்து  இரவெல்லாம் கண் விழிக்க வேண்டிய அவசியமில்லை.
இப்பொழுதெல்லாம் நிம்மதியாக தூங்கினான்.
ஓரிரு மாதங்களில் வீர் அப்பாவுடன் செலவழிக்கும் நேரம் குறைந்தது. அவர் சாப்பிட்டாரா இல்லையா என்று ஓடோடி வந்த காலம் போய் , எப்படியும் அவருக்கு சாப்பாடு தேவையில்லை, தூக்கம் வந்தால் தூங்கப்போகிறார் என்ற நினைப்பு வளரத்துவங்கியது. அவருடன் பேசுவது கூட குறைந்து போனது.
அப்பா இறந்துவிட்டால் என்ன செய்வது என்று அவருடன் அதிக நேரம் அன்போடு பேசியவன், இன்று அவர் எங்கே போகப்போகின்றார், நான் இருக்கும் வரை இருக்கத்தான் போகின்றார், நான் இருக்கும் வரை என்ன, சூரியன் இருக்கும் வரை அவர் இருக்கத்தான் போகின்றார் என்று  அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் நுழைந்த நினைப்பு, அவரை உதாசீனப்படுத்துமாறு செய்தது. ஆனால் அவர் மட்டும் இவனை மிக அன்போடு கவனித்து வந்தார்.
ஆனாலும் வீரின் மனதில் ஏதோ ஒரு இழப்பு இருந்தது. அது என்னவென்று தெரியாமல் இருந்தான்.
ஒரு நாள் வீர் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, அவனது கனவில் அப்பா வந்தார்.
“வீர், எப்படிப்பா இருக்க” என்றார்
“நல்லா இருக்கேன்ப்பா “ என்றான்.
“ஆனா, நான் நல்லா இல்லப்பா” என்ற அவரது கண்கள் கலங்கியிருந்தன.
“என்னாச்சுப்பா ” என்றான்.
“நீ என்னை மறந்துட்டயில்ல ” என்றார்.
“நான் எங்கப்பா உங்கள மறந்தேன். நீங்கதான்  என் கூடவே இருக்கீங்களே” என்றான்.
“அதுதான்ப்பா பிரச்சனையே , நான் பிரதியா  உன் கூடவே இருக்கறதால தான் நீ என்னை மறந்துட்ட” என்றார்.  அழுதார். அவர் தேம்பி அழுவதைப்பார்த்து வீருக்கும் அழுகை வந்தது.
“அப்பா அழாதீங்கப்பா.. சொல்லுங்கப்பா, உங்களுக்கு என்ன குறை வெச்சேன்னு சொல்லுங்க, நான்   என்ன செய்யணும் சொல்லுங்க” என்றான்.
“ நீ இப்ப அழுகறியே, நான் செத்தப்போ அழுதியாப்பா” என்றார்.
“இல்லப்பா, நீங்கதான் என் கூடவே இருக்கீங்களே” என்றான்.
“ஒரு மனுஷனால, உயிரோட இருக்கறப்போ அடுத்தவங்க மனசுல முழுசா இடம் புடிக்க முடியாதுப்பா, செத்ததுக்கு அப்புறம்தான்  எந்த மனுஷனுக்கும் அடுத்தவங்க மனசுல இடம் தர்றாங்க. அந்த மனுஷனப்பத்தி நினைச்சு அவனுக்கும் அவங்களுக்குமான உறவைப்பத்தி எல்லாம் நினைச்சு வருத்தப்படறாங்க. அந்த மாதிரி நீ என்னைப்பத்தி நினைச்சிருக்கியாப்பா “ என்றார்.
“இல்லப்பா.. நீங்கதான் கூடவே இருக்கீங்களேப்பா” என்று அழுதான்.
“அது நான் இல்லப்பா, அது ஒரு பிரதி. அவ்ளோதான். நான் இல்லாம நீ கஷ்டப்படுவியேன்னு  உனக்காக அதை செய்துக்க சொன்னேன். ஆனா, அது இருந்தா  நீ என்னை மறந்துருவேன்னு நினைச்சு கூட பார்க்கலப்பா”   என்றார்.
“அழுகாதீங்கப்பா” என்று அவரது தோளைத்தொட  எத்தனித்தவன், அவர் பின்னால் நகர, அவரைப் பிடிக்க முடியாமல் கை காற்றில் கீழே இறங்க..  தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்த வீர் கனவைப் போலவே கையை முன்னே நீட்டி, “அப்பா, அழாதீங்கப்பா” என்று அழுதபடியே அவரை பிடிக்க முனைவதாக நினைத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.  
முழிப்பு வந்தது. கண்டது கனவு என்பதை அவன் அறிந்துகொள்ள இரண்டு நிமிடம் பிடித்தது.
கனவில் அப்பா அழுதது அவனுக்கு இன்னமும் கேட்டது.
“அப்பாவுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதவனாகிவிட்டேன். தொழில் நுட்பம் எல்லாம் கொடுத்துச்சு . ஆனா,  மனுஷனுக்கு  இயற்கை கொடுத்த  உணர்ச்சிகள் மரத்துப்போயிடுச்சு. ஒரு மனுஷனோட இழப்புக்காக அழுவது அவனுக்கு  நாம குடுக்கற மரியாதை . அவங்க நினைவுகள சுமந்துட்டு வாழ்றதுல ஒரு சுகம் இருக்கு. நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா  ” என்று எழுந்தான்.
இத்தனை நாளாக தனக்கு ஏற்பட்ட இழப்பு உணர்ச்சிகள் என்பதனை புரிந்துகொண்டான்.  
கண்ணீரை துடைத்தபடி அருகில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் பிரதி அப்பாவைப பார்த்தான்.
“எந்தக்காரணம் கொண்டும், இந்த பிரதி மனிதர்கள  குளிரான பிரதேசங்களுக்கு கூட்டிட்டு போகாதீங்க. குளிர் மைனஸ் 40 டிகிரிய தாண்டுனா இவங்க உடம்புல இருக்கற Inverter cells வேலை செய்யாது.  மைனஸ்  70 டிகிரிய தாண்டுனா ரிப்பேர் கூட செய்ய முடியாது. அப்புறம் நீங்க புது பிரதியத்தான் உருவாக்கிக்கணும் ” என்று டாக்டர் இந்த பிரதி அப்பாவை ஒப்படைத்தபொழுது சொன்னது ஞாபகம் வந்தது.   
இனியும் தாமதிக்க கூடாது என்று முடிவு செய்தான்.
தனது Air conditioner ரில் அதிகபட்சமான மைனஸ் 20 டிகிரி குளிரில் வைத்து ஓடவிட்டு, அறையை தாளிட்டு  வெளியில் வந்தான்.

அப்பாவை நினைத்து ஓவென்று கதறி அழுதான்.அறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட மைனஸ் இருபது டிகிரி, பல்கிப் பெருகியது.பிரதி பிணமானது.