Sunday, October 18, 2009

நெய்யூத்த வாடி புள்ள


சின்ன சின்ன கூடு கட்டும்
சிட்டுக் குருவி போல நானும்
சிட்டு நீ வந்து தங்க
வீடு கட்டி வெச்சேன் புள்ள


சிங்காரி நீ வந்தா
நீ உடுத்த வேணுமுன்னு
சீமையில நான் போயி
பட்டு வாங்கி வந்தேன் புள்ள


தைமாசம் பொறந்ததுன்னு
அறுவடையும் முடிஞ்சதுன்னு
ஆசையில நானுனக்கு
பரிசம் போட ஓடி வந்தேன்


தாலி ஒண்ணு வாங்கி வந்து
நான் கட்டப் போகுமுன்னே
வேறொருத்தன் கட்டிப்புட்டன்
வேரறுந்து போச்சுபுள்ள


மாமான்னு ஓடி வந்து
மடியிலதான் தூங்குவியே
மாமனோட நெனப்ப இப்போ
உம் மனசு மறந்துடுச்சா

மருதாணி வேணுமுன்னு
மல்லுக்கு நின்னவளே
மருதாணி அரைக்கிறப்போ
மனச சேத்து அரைசுட்டியா


நெல்லறுக்கப் போகையில

நிழலாக வந்த புள்ள

நெசமாவே நீயும் இப்போ

நெஞ்சருத்துப் போயிட்டியே

உசுராக இருந்த நீயும்

ஊரு தாண்டிப் போயிட்டாலும்

உனக்காக வேணுமுன்னா

உசுரக்கூட தாரேண்டி

என்னுசுரு உள்ளவரை

உன்நெனப்பு வாழும் புள்ள

நெருப்புல நான் வேகும்போது

நெய் ஊத்த வாடி புள்ள

Thursday, October 15, 2009

வலிமையால் அல்ல

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

முன் தோன்றிய

மூத்தகுடி மக்கள்

ஒரு

மூர்க்க குடியின் கையில்

நசுங்குவது

மூர்க்க குடியின் வலிமையால் அல்ல

மூத்த குடியினரின் ஒற்றுமையின்மையால்.

நாம் தமிழர்

ஊரிழந்து உறவிழந்து
உடுப்பிழந்து உறுப்பிழந்து
கற்பிழந்து ......
இழப்பதற்கு இனி ஏதும் இல்லை
இலங்கையில் தமிழர்க்கு.
பட்டாடை பட்டாசு
பணியாரம் பூந்தி
இந்தியத்
தொலைக்காட்சியில்
முதன்முறையாக வரும்
சலனப்படம்...
களிப்பதற்கு இன்னும் வேண்டும் நமக்கு.