Monday, November 16, 2015

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 3
காலை 9 மணி
DGP யின் ஏரோகார்  மத்திய சிறைச்சாலையின் வளாகத்தில் வந்து  இறங்கியது. ஓடிச்சென்ற சிறை காவலர்கள், வரிசையில் நின்று சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்தனர்.
ஒரு விசாரணை கைதியை கோர்ட்டுக்கு அழைத்துச்செல்ல DGP யே வந்திருப்பது நாட்டிலேயே இதுதான் முதன் முறை. வேறு வழியில்லை. சிறையில் இருப்பது சாதாரண ஆள் இல்லை.   
DGP காவலர்கள் மரியாதையை ஏற்று, பின்னர்  சிறைச்சாலைக்குள் நுழைந்தார்.
வீர் கைது செய்யப்பட்டு ஒரு நாள் ஆகியிருந்தது. வீருக்கு வயது இன்றோடு 9956 நாட்கள். அவனது கலைந்த தலை முடியும், குறுந்தாடியும், தொள தொள வென்று அணிந்திருந்த உடையும் அவனை ஒரு விஞ் - ஞானி  என்று சொல்லாமல் சொல்லியது. நான்கு புறமும் கண்ணுக்குப் புலப்படாத லேசர் தடுப்புக்களால் பாதுகாக்கப்பட்ட  புல் வெளியின் நடுவே தெளிவான முகத்தோடும், புன்னகைக்கும் பார்வையோடும் அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த தனிமைச் சிறையில்  அவனது விரல்கள் காற்றில் ஏதேதோ கணக்கு போட்டபடி இருந்தன.
சிறு வயதில் இருந்தே வீர் இப்படித்தான். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல அமர்ந்து இருப்பான். சில நேரம் காற்றை பிடிப்பது போல கைகளை காற்றில் வீசியபடியே இருப்பான். சில நேரம் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் வஸ்த்துக்களை பிரித்து மேய்ந்தபடி இருப்பான்.  நாளுக்கு நாள் அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டு ஒரு நாள் அவனைச்  சுற்றி இருப்பவர்கள் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லத்  துவங்கினான். முதலில் விளையாட்டாக நினைத்தவர்கள், இவன்  அட்சரம் பிசகாமல் அவர்கள் மனதில் நினைப்பதை சொல்ல,  பயந்து ஓடினர்.
வீரின் பெற்றோர் அவனை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
‘டாக்டர் என் பையனுக்கு என்னன்னு பாருங்க?’ , என்று படபடத்தார் அப்பா
“என்ன ஆச்சு ? ” என்றார் டாக்டர்
“யார் மனசுல என்ன நினைச்சாலும் அப்படியே சொல்றான் டாக்டர். ரொம்ப பயமா இருக்கு   ” என்றாள்  அம்மா.   
சற்று தள்ளி அமைதியாக அமர்ந்திருந்த வீரைப்  பார்த்தார் டாக்டர்.  
“ இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே.. பொய் சொல்றாங்களோ..” என்று அவர் நினைக்க,  அவரைத் திரும்பிப் பார்த்த  வீர், “ இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே.. பொய் சொல்றாங்களோ..” என்று சொல்லி ,  டாக்டரைப் பார்த்து கரெக்ட்டா என்றவாறு புருவங்களை இரு முறை ஏற்றி இறக்கி சைகையில் கேட்க  டாக்டருக்கு வியர்த்தது.
“எப்படிப்பா இவ்ளோ கரெக்ட்டா சொல்ற ” என்று அவர் கேட்க, “ தெரியல டாக்டர், என்னைச் சுத்தி இருக்கறவங்க பேசாம இருந்தாலும் எனக்கு அவங்க குரல் காதுக்குள்ள கேட்கற மாதிரி இருக்குது. ஆனா எப்படின்னு தெரியல” என்றான்.  அதன் பின்னர் எத்தனையோ டாக்டர்களிடம் சென்றும் யாருக்கும் அவனது நிலையை சரியாக சொல்ல முடியவில்லை. அது நோயா, இல்லையா என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிட்டார்கள்.
ஆனால் வீர் விடவில்லை. தனக்கு எப்படி தெரிகின்றது என்று சோதித்துக்கொண்டே இருந்தான். தனது 6285 ஆம் நாளில் கண்டுகொண்டான்.  
இவன் கண்டுகொண்டதை,  ஒரு மாதத்தில் நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள் , பிரமுகர்கள்  முன்னிலையில்  ஒரு கருவியின் உதவியோடு நிரூபித்துக்காட்டினான்.  
“ என்ன சொல்றீங்க .. மூச்சுக்காற்றா ” தலைமை விஞ்ஞானி ஆச்சர்யமாக கேட்டார்.  
“ஆமாம். மூச்சுக்காத்து. மூச்ச வெளிய விடறப்போ வெறும் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைட் , நைட்ரோஜன் . ஆர்கான் மட்டும் வெளிய வர்றதில்ல.. மனுஷனோட எண்ணங்களும் தான்” என்றான்.
“எப்படி சாத்தியம்” என்று  கேட்டார் பிரதமர்.
“ காதலிக்கற பொண்ணு திரும்பி பார்ப்பான்னு காதலன் காத்துட்டு  நிக்கறப்போ, அவ நினைச்ச மாதிரியே திரும்பி பார்ப்பா இல்லையா, இந்த நினைச்ச மாதிரியே அப்படின்னா.. என்னன்னு நினைச்சீங்க, உங்க நினைவலைகள காத்து  தூக்கிட்டு சுமக்குது. உங்களுக்கு உள்ள போறப்போ, அடுத்தவனோட எண்ணத்த உங்களுக்கு உணர்த்துது. வெளிய வர்றப்போ, உங்க எண்ணத்த உலகத்துக்கு உணர்த்துது. ஒருத்தர்  மனசுல இருக்கறத அடுத்தவருக்கு காற்றலைகளில் கடத்திட்டு போறது  மூச்சுக்காத்துத்தான். நான் எப்பவும்  எலக்ட்ரானிக் கருவிகளோடையே  பொழுத கழிச்சதால என்னைச் சுத்தி இருக்கறவங்க விட்ட மூச்சுக் காத்துல கலந்திருக்கற அவங்க மன ஓட்டத்த அந்த கருவிகளில் உள்ள ஏதோ ஒரு வஸ்து எனக்கு  ஒலிப்பரிமாணம் செஞ்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்ப நான் கண்டு பிடிச்சிருக்கற இந்த கருவி மூலமா, ரத்தம், யூரின் டெஸ்ட் பண்ற மாதிரி , Eupnealogy Test மூலமா,  மனுஷன் சுவாசிச்சு வெளிய விடற காத்த பிடிச்சு சோதனை செஞ்சா, அவனோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். ” என்று முடிக்க, ஒரு அதிசயமான கண்டுபிடிப்பிற்கு நாடு தலை வணங்கியது.  விஞ்ஞானி  வீர் உருவானான்.
DGP காவலர்கள் பின் தொடர  வீரின் முன் வந்து நின்றார்.
இன்று அவர் வந்திறங்கிய எரோகார் கூட வீர் கண்டு பிடித்ததுதான். கைதிகளை வெட்டவெளியில் உலவ விடுங்கள், ஆனால் கண்ணுக்கு புலப்படாத லேசர் சுவர்களுடன், என்று இந்த சிறைச்சாலைக்கான மூளை கூட வீருடையதுதான். பல அறிய கண்டுபிடிப்புகளை  உலகத்துக்குத் தந்த மாபெரும் விஞ்ஞானி  இப்படி மக்களை திசை திருப்ப  நினைத்தது ஏனோ என்று நினைத்தபடி வீரை வணங்கினார். வீர் புன்னகைத்தான்.
அவர்களுக்கு  நடுவில் இருந்த லேசர் கதிர்கள் நிறுத்தப்பட, வீர் எழுந்து  வந்தான். DGP யுடன் எரோகாரை நோக்கி நடந்தான்.
சிறைச்சாலையில் விசாரணைக்கைதிகள் என்று எவரும் இல்லை. நாட்டில் தீர்ப்பு மிக விரைவாக வழங்கப்படுகின்றது. அதற்க்கு முக்கிய காரணம்,  Eupnealogy Test. குற்றம் சுமத்தப்பட்டவரை இந்த சோதனை மூலமாக உடனடியாக கண்டுபிடித்து தீர்ப்பு வழங்க முடிகிறது.
வீர் போலீசாருடன் எரோகார் ஏற, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எரோகார் கோர்ட்டை அடைந்தது.
முக்கியமான கேஸ் என்பதால் நாட்டின் பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் வந்திருந்தனர்.
வீர் மீது பொதுமக்கள் யாரும் தாக்குதல் நடத்தாமல் இருக்க, கடுமையான காவல் போடப்பட்டிருந்தது.
வீர்  அழைக்கப்பட, குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்றான்.    
“உங்கள் மீது மக்களை அறிவியல் வழியினின்று மத வழிக்கு திருப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஒப்புக்கொள்கிறீர்களா ? ”  என்று கேட்டார் நீதிபதி.
“இல்லை, மதம் என்ற சொல் தவறானது. நான் சாமி பூதம்னு எதுவும் சொல்லல, என்னதான் அறிவியல்,  கண்டுபிடிப்புன்னு நாம சொல்லிக்கிட்டாலும், இதை நமக்கு உணரச்செய்வது ஒரு சக்தி. இத்தனை பேர் வாழற இந்த உலகத்துல எல்லாரும் டாக்டர் இல்ல, எல்லாரும் விஞ்ஞானி இல்ல, எல்லாரும் இசை அறிந்தவர்கள் இல்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வித்தைய கத்துக்கற அறிவ கொடுத்து அவங்க மூலமா உலகத்துல எதுவும் மிஞ்சிப் போகாம, எதுவும் இல்லாமையும் போகாம, சம நிலையில இருக்கற மாதிரி பார்த்துக்கற சக்தி. அந்த சக்திக்கும் நம்ம உயிருக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அது தான் ஒருத்தன் பொறக்கறதுக்கும் சாகறதுக்கும் காரணம்னு சொல்றேன் “ என்றான்.
“அப்பா விஞ்ஞானத்தையும் அறிவியலையும் மிஞ்சி ஒரு சக்தி இருக்குன்னு சொல்றீங்க ” என்றார் நீதிபதி
“ ஆமாம், பூமியில இருக்கற உயிர்களுக்கும் இந்த உலகத்துக்குமான பந்தம் காந்த அலைகளால இணைக்கப்பட்டிருக்கு. அத துண்டிச்சா போதும். மனுஷனுக்கு உயிர் போயிரும். அந்த நேரத்துல அவன் இருக்கற இடத்த பொறுத்து மரணத்துக்கான காரணம் வேறுபடுமே தவிர, மரணம் நிச்சயம்”என்றான்.
அனைவரும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
“இந்த பூமி சுத்தறப்போ, அண்டத்துக்கும் மனிதனுக்குமான காந்த அலைகள்ல பல கற்றை கற்றையா துண்டிக்கப்பட்டுட்டே இருக்குது.  துண்டிக்கப்பட்ட அலைக்கு இணைக்கப்பட்டிருந்த உயிர் யாருதோ அவங்க செத்துப்போறாங்க ”      
“எப்படி சொல்றீங்க. ”என்றார் நீதிபதி.
“ ஒரு நாளைக்கு எத்தனை  பேர் செத்துப்போறாங்க. எல்லாரும் வயசாகியா சாகறாங்க. இல்லையே. கருவுல இருக்கற குழந்தை சாகுது. ஊருக்கெல்லாம் நல்லது பண்றவன் சின்ன வயசுல செத்துப்போறான். இவனெல்லாம் செத்து தொலைஞ்சா பரவாயில்லன்னு திட்டப்படற அயோக்கியன் உயிரோட இருக்கறான். இந்த வேறுபாடு உலகம் முழுக்க இருக்குங்கறத ஒத்துக்கறீங்களா ” என்றான்  
“இது புது விஷயம் இல்லையே. அதுக்குத்தான விதின்னு பேர் வெச்சிருக்கோம். ஆனா உங்க மேல இருக்கற குற்றச்சாட்டே,  இந்த காந்த அலைகள  நீங்க துண்டிச்சு எந்த மனிதனுக்கும் மரணத்தை உண்டு பண்ணக்கூடிய ரகசியம் உங்களுக்கு தெரியும்னு சொன்னது தான். அதனால பல மக்கள் உங்கள கும்பிட ஆரம்பிச்சது மாபெரும் குற்றம்  ” என்றார் நீதிபதி.  
“ ஆமாம் தெரியும். இத சொன்னதுக்காக என்னை கும்பிட்டாங்க. நான் அதை விரும்பல. ஆனாலும் அவங்கள தடுக்க முடியல. இது எப்படி குற்றமாகும். எனக்கிருக்கற சக்திய சொல்லிக்கறது குற்றமா  ” என்றான்.
“ குற்றந்தான்.  இப்படி செய்துதான் மதங்களை தோற்றுவிக்கின்றீர்கள். மதங்களால் தான்  மனிதனுக்கு பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. மதங்களின் பெயரால் நடந்த  மூன்றாம் உலகப்போரில் எத்தனை கோடிப்பேர் உயிரிழந்தனர் என்பதனை மறந்து விடீர்களா. அதனால் தானே மதங்களற்ற அறிவியல் உலகில் நாம் வாழ்கின்றோம் ”  என்றாய் நீதிபதி.
வெளியில் வீரின் பக்தர்களுக்கும், பிறருக்கும் சண்டை மூண்டது.  
“ இந்த ரகசியம் உங்களுக்குத் தெரியும்னு நிரூபிக்க முடியுமா ” என்றார் நீதிபதி
“ முடியும். யார் தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் “ என்றான்.
நீதிபதி யாரை கை காட்டுவாரோ என்று அங்கிருந்த அனைவரும் பயந்து ஒருவர்  பின் ஒருவர்  ஒளிந்து கொண்டனர்.
“அதன் தொடர்பை துண்டித்துக் காட்டுங்கள்  ” என்று அவர் கைகாட்டிய  திசையில் ஒரு போலீஸ் நாய் நின்றிருந்தது.
அந்த  நாயைப் பார்த்து  “ உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ” என்று  வீர்  தன் கண்களை மூடி, மூச்சை இழுத்து விட்டான்.  கைகளை காற்றில் நாட்டியம் போல ஆட்டினான்.   என்ன நடக்கபோகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க,  மெதுவாக கண்களைத்  திறந்தான்.  
“துண்டித்துவிட்டேன் , ஆனால் அதனோடு சேர்த்து  இன்னும் நான்கைந்து காந்த அலை நூல்களும் அறுந்தன, மன்னிக்கவும்” என்றன். அவன் சொல்லி முடித்த மறுகணம், அந்த வளாகத்தின் அருகில் வானில் சென்றுகொண்டிருந்த ஏரோகார் ஒன்றில் மின் தடங்கள் ஏற்பட, அது  சத்தமின்றி  அந்த நாய், மற்றும் அதனுடன்  நின்றிருந்த காவலர்கள் மீது விழுந்தது. அடுத்த நொடியில் அங்கு ஆறு பிணங்கள் கிடந்தன.
நீதிபதி மூர்ச்சையாகிப் போனார்.
அனைவரும்  உறைந்து போய்ப் பார்த்தனர்.  
பலர் சாஷ்டாங்கமாக வீரின் முன்னால் விழுந்து வணங்கினர்.
“ இது பித்தலாட்டம்.  ஒத்துக்கொள்ளுங்கள். என்ன மாயம் செய்தீர்கள்” என்று தனது உள் பயத்தை காட்டிக்கொள்ளாமல் கேட்டார் நீதிபதி.  
பிரதமர்  “இவரை  தனிச்சிறையில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் “ என்று கேட்டார்.  
“ இவனை சோதித்து அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும் ” என்று நினைத்தார்.  
பிரதமரைப் பார்த்த வீர்,  “ என்ன பிரதமர் அவர்களே, Eupnealogy test செய்து ரகசியத்தை தெரிந்து கொள்ளத்தானே ”  என்று கேட்க, பிரதமர்  அதிர்ச்சியடைந்தார். மனதில் எதுவும் நினைக்ககூடாது என்று முடிவுடன் பார்த்தார்.     
அவரைப்பார்த்து புன்னகைத்த வீர் , “கண்டுபிடித்த எனக்கே சோதனையா, விடமாட்டேன் ” என்று கண்களை மூடினான்.
பிரதமர் கதி கலங்கிப்போய்.. “ மன்னித்துவிடுங்கள் … என்னைக் கொல்ல  வேண்டாம்.  என் தொடர்பை துண்டிக்க வேண்டாம் ” என்று மண்டியிட்டு வேண்டினார்.
நீதிபதியும் காவலர்களும் கூட பயந்து “ எங்களையும் மன்னித்து விடுங்கள் , உங்கள் சக்தி தெரியாமல் செய்துவிட்டோம் , நீங்கள் ஞானி “  என்று வீரின் காலடியில் விழுந்தனர்.
வீர்  கைகளை வேகமாக காற்றில் சுழற்றினான். பின்னர் புன்னகைத்தபடி கண்திறந்தான்.
மரணபயத்தில் அனைவரும் பார்க்க, “ என்னை நம்பாத உலகத்துக்கும் எனக்குமான தொடர்ப நான் துண்டிச்சுட்டேன். நல்லா இருங்க ” என்று சொன்னான்.
அடுத்த நொடி,  வெளியல்  காத்திருந்த மக்களில் சிலர் உள்ளே புகுந்து “ இன்னும் இந்த ஏமாத்துக்காரனோட என்னய்யா விசாரணை ” என்று சொல்லி, வீரின் மீது பாய்ந்தனர்.
தடுக்க வந்த DGP தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்.  
அடுத்த ஐந்தாவது நொடி, வீர் புன்னகை மாறாத முகத்துடன் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தான்.
பல நூற்றாண்டுகளாக பல ரகசியங்கள் மனிதர்களோடு மறைந்தது போல இந்த
ரகசியமும்  அவனோடு  மண்ணுக்குள் புதைந்தது.

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 2
நடு இரவு
வீரும் கன்யாவும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் கண்ட இடத்திலேயே பொசுக்கிவிட்டு வருமாறு ராணுவத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது . கையில் லேசர் துப்பாக்கியுடன் ராணுவம் தேடுதல் வேட்டையை துவங்கியது . இவர்கள் நாட்டுக்கு செய்த துரோகத்தை பற்றி தெரிந்த இந்த ஒரு மணி நேரமாக நாட்டு பிரதமர் பைத்தியம் பிடித்தது போல ஆகிவிட்டார். இப்படி ஒரு துரோகம் செய்ய எப்படி துணிவு வந்தது அவர்களுக்கு. கடந்த பத்து வருடங்களாக அவர் ஆட்சியில் நாட்டில் காப்பாற்றப்பட்ட இறையாண்மைக்கு இப்படி ஒரு இழுக்கா. கூடாது. அவர்கள் சாகவேண்டியவர்கள். இது நிச்சயமாக அயல் நாட்டு சதிதான். இல்லை என்றால் இப்படி ஒரு இழி செயலில் அவர்கள் இறங்கியிருக்க மாட்டார்கள்.
வீர் கன்யாவை ஒரு ரயில் பயணத்தில்தான் சந்தித்தான். பார்த்த நொடியில் யாரையும் பற்றிக்கொள்ளும் அழகு . இரண்டு சென்டிமீட்டர் அளவு கொண்ட அழகிய இரண்டு கண்கள், அதில் பகலின் நடுவில் இரவு ஓட்டிக்கொண்டதைப்போல கருப்பு வெள்ளை விழிகள், இரண்டு கண்களின் நடுவில் சற்று கீழே ஐந்து கிராம் எடை கொண்ட மூக்கு, புன்னகைத்தபொழுது உறைந்து போனது போல புன்னகைத்துக்கொண்டே இருந்த உதடுகள். கணபதி ஸ்தபதி ( 20 மற்றும் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரிய சிற்பி ) பார்த்து பார்த்து செதுக்கியது போன்ற உடல் அமைப்பு. போன்ற என்ன? பார்த்து பார்த்து செய்யப்பட்டவர்கள் தானே இவர்கள் அனைவரும்.
கட்டளை வந்த இரண்டாவது  நிமிடத்தில் வீரும் கன்யாவும் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது. வீர் மற்றும் கன்யாவின்  Motoscat ( Motor பொருத்தப்பட்ட scating shoe, உடலை எப்படி வளைத்தாலும் கீழே விழவிடாது. மேடு பள்ளம் அனைத்திலும் சர்வ சாதாரணமாக செல்லக்கூடியது) வீட்டிலேயே இருந்தது. அதில் சென்றால் எளிதில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் விட்டுச்சென்றிருக்கிறார்கள். அதிகாரி  தனது HTD ( Human Tracking Device) ஐ எடுத்து , வீரின் அடையாள எண்ஐ தேடினார். வீர் இங்கிருந்து சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் நாட்டின் எல்லையருகில் இருப்பதனை அது  சமிக்ஞை மூலம் காட்டிக்கொடுத்தது. ராணுவம் அந்த திசை நோக்கி விரைந்தது.     
கன்யா சோர்ந்து அமர்ந்தாள். அவளால் ஓட முடியவில்லை. அவளைத் தூக்கிக்கொண்டு ஓடும் சக்தி வீருக்கில்லை. இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் போதும். கடற்கரை. எப்படியாவது தப்பி அயல் நாடு சென்று விடலாம்.  வாரத்திற்கு ஒருமுறை உடல் சக்திக்கான மாத்திரை போட்டுக்கொள்ளும் நாளிது. உயிரை காப்பாற்றிக்கொள்ளும் அவசரத்தில் மாத்திரையை  எடுத்து வர மறந்துவிட்டார்கள். வெளியே எங்கும் கிடைக்காது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் மட்டுமே கிடைக்கும். அங்குள்ள scanning இயந்திரத்தில் ஏறி நின்றதும், அவர்களின்  அடையாள எண் ஐ கொண்டு  ஹெல்த் ஹிஸ்டரியை கண்டறிந்து, உடல் எடை , வயது ஆகியவற்றை வைத்து எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு மில்லிகிராம் மாத்திரை தருவார்கள். அடையாள எண் என்றதும் தான் வீருக்கு ஞாபகம் வந்தது.
IAC.. IAC…  தளர்வையும் மீறி வீர் தேடினான். கல்லோ, தகடோ, ஏதோ ஒன்று வேண்டும். சின்ன ஊசி போன்ற ஒரு வஸ்து கிடைக்க, வீர் தனது உடலில் இருந்த  Identification and Authentication chip ஐ பிய்த்து எறிந்தான். கன்யாவின் தோள் தசையையும் அறுத்து, அவளது உடலில் இருந்தும் அந்த சிப்பை தூக்கி எறிந்தான். கத்தாமல் அவளது வாயை கையால் மூட,அவள் வலியால் இவனது கையை கடித்தாள். பீறிட்டு  வந்த ரத்தத்தை தன் சட்டை துணியால் கட்டினான். மகாபாரதத்தில் கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்ததாக அவனது புராண அறிவு சொல்லியிருக்கிறது. ஆனால் இங்கு பிறக்கும்.. இல்லையில்லை உருவாக்கப்படும் எல்லா குழந்தைக்கும் , உருவாக்கப்பட்ட உடனே இந்த chip வைக்கப்படும். சாகும் வரை அதுதான் அவர்களுக்கு அடையாளம். எங்கு செல்லவும் அதுதான் திறவுகோல். சென்ற நூற்றாண்டைப்போல தனித்தனியாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு என்று எதுவும் வேண்டாம். இது ஒன்று போதும் நாடு சுற்றி வர. மெதுவாக  இருவரும் நடக்க துவங்கினார்கள்.
அவர்கள் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் ராணுவம் அங்கு வந்தடைந்தது. சமிக்ஞை வந்த திசையில் இரண்டு IAC கள் கிடந்தன. நிச்சயமாக அவர்கள் நாட்டை தாண்டி விடுவார்கள் என்று அவருக்கு புரிந்தது. ஆனால் பிடித்துவிட வேண்டும். இல்லை என்றால் இவருக்கு கடினமான தண்டனை கிடைக்கும். அவர்கள் தப்பிப்போக ஒரு வகையில் இவர்தான் காரணம். கன்யாவிடமிருந்து கரு முட்டை சேகரிக்கச்சென்ற ஊழியன் அவள் நாளை வருமாறு சொல்கிறாள் என்று அளித்த புகார் இவரின் கவனத்திற்கு வந்தும்  அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். நேற்றே பிடித்திருந்தால் இன்று இப்படி அலையவேண்டாம். அவர்களைப் பிடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் இது ராணுவ ரகசியத்தை விட ரகசியமாக வைக்கவேண்டிய விஷயம் . அதனால் இவரோடு வந்த ஒரு கூட்டத்துக்கும் பிரதமருக்கும் தப்பியோடியவர்களுக்கும் தவிர யாருக்கும் தெரிய கூடாது.    
சற்று தூரத்தில் கடல் அலைகள் சப்தமிட்டன. வீர் கன்யாவைப் பார்த்து இனி பயமில்லை என்றவாறு புன்னகைத்தான். ஒரு காலத்துல கோழிகளை இப்படித்தான் உருவாக்கினார்களாம். கோழிக்கு முட்டை போடா மட்டும்தான் வாய்ப்பு. அடைகாக்க அல்ல. Incubator ரில் வைத்து  முட்டைய  குஞ்சு பொறிக்க வைத்தார்களாம் . அப்படி  கோழியை  தயாரித்த   மனிதர்கள் , இப்போது  மனிதர்களையே அப்படித்தான் தயாரிகிறார்கள் . தொப்புள்கொடி உறவு என்றால் என்னவென்றே யாருக்கும் கடந்த சில வருடங்களாக தெரியாது.
உலக நாடுகளில்  எங்கள்  நாட்டில் தான் அறிவாளிகள்  அதிகம் என்று  மார்தட்டிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நாட்டில் இப்படி.  இதில்  மனிதாபிமானம் , மனித ஆசாபாசங்களுக்கெல்லாம் இடமோ இல்லை.  
கலை, அறிவியல், விஞ்ஞானம், வரலாறு என்று  ஒவ்வொரு விஷயத்திலும் மிக உயர்ந்த இடத்துல உள்ள பெண்களையும் ஆண்களையும்  தேர்ந்தெடுப்பார்கள். மிக கவனமாக எல்லா வசதிகளுடனும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.  அந்த  பெண்கள்  கரு முட்டையை மாதம் தவறாது  அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். வீட்டிற்கே சென்று சேகரித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் உள்ளார்கள். எண்ணிக்கையில் ஆணும் பெண்ணும் சரி சமமாக இருக்கும் வகையிலும், எல்லா துறைகளிலும் வல்லுனராக இருக்கும்படியாகவும் கணக்கு வைத்து குழந்தைகள் அரசு நிறுவனத்தால் உருவாக்கப்படுவார்கள்.   யாருக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ  அந்த விவரத்தை குறித்து கொடுத்து , எடுத்து வளர்க்கலாம். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். ஆனால்  குழந்தை பெற்றுக்கொள்ள  கூடாது. அறிவும் திறனுமற்ற குழந்தைகள் உருவாகிவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் மிக கவனமாக இருக்கிறது.
அதனால் எக்காரணம் கொண்டும் கர்பமடைய கூடாது. அது நாட்டுக்குச்  செய்யும் துரோகமாகும். நாட்டு முன்னேற்றத்துக்குச் செய்யும் துரோகம்.
வீரும் கன்யாவும் கடற்கரையை அடைந்தார்கள்.  பழக்கப்பட்டவன் போல ஒரு இடத்தில் மணலைத் தோண்டி ஒரு டிரம்மை எடுத்தான். தூக்கி கடலில் வீசி,  அதன் ஒரு பக்கத்து வாயை திறந்து, அவளை அதற்குள் அமரவைத்து, தானும் அமர்ந்தான். மீண்டும் அதனை உள்ளிருந்து மூடிக்கொண்டு விசையை அழுத்த, கடலுக்குள் மூழ்கியது அந்த நீர்மூழ்கி கருவி.  
பிரதமர் முன் பயத்துடன் நின்றிருந்தார் ராணுவ அதிகாரி.  அவரை தன லேசர் துப்பாக்கியால் சுட, இருபது கிலோ வாட் லேசரில் பொசுங்கி சாம்பல் கூட மிஞ்சாமல் செத்தார் அதிகாரி.
“ஒருத்தி கர்பமானதுக்கா இந்த தண்டனை. ரொம்ப அதிகமாச்சே ” என்று  கிசுகிசுத்த ஒரு ராணுவ வீரனிடம் இன்னொருவன் கிண்டலான புன்னகையுடன்  “ யார் கர்பமானாலும் நாட்டு இறையாண்மைக்கு இழுக்குன்னு பேசறவர், அவர் ஆண்மைக்கு ஒரு இழுக்கு வந்தா விட்டுடுவார “ என்றான். முதலாமவன் புரியாமல் பார்த்தான். “ நம்ம பிரதமர் தன்னோட அதிகாரத்த பயன்படுத்தி உபயோகப்படுத்திக்கற பெண்கள்ள  அவளும் ஒருத்தி. தன்  கர்பத்துக்கு இவர்தான் காரணம்னு அவ சொன்ன அடுத்த நிமிடம் இவர் கட்டிக்காத்த பதவி காலி. டென்ஷன் நாட்துக்காக இல்ல, பதவிக்காக “ என்றான்.     
நடுக்கடலின் அடியில் நீர்மூழ்கி பயணித்தது. வீருக்கு தன் முன்னோர் பிறந்த மண்ணில்தான் சாக வேண்டும் என்ற ஆசை. அந்த நாடு கடல் தாண்டி உள்ளது. அதனால் தப்பியோட திட்டமிட்டான். அதே வேளையில் தனக்கு தெரிந்த பெண் ஒருத்தியும் இதே யோசனையில் இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னதன் பேரில் வீர் கன்யாவை ரயிலில் சந்தித்தான்.   
“ பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவீர்களா ” சிறு சந்தேகத்துடன் கன்யா கேட்டாள்.   
“ எம்மேல நம்பிக்கை இல்லையா “ - வீர்
“உங்க மேல நம்பிக்கை இல்லாமலா  ரெண்டு நாளைக்கு முன்னால ரயில்ல பார்த்த உங்கள நம்பி       இத்தனை தூரம் வந்தேன் “
“நீங்களே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிட்டீங்க. மாறவே மாடீங்களா” என்றான்.
அவள் புன்னகைத்தாள்.
“தப்பா நினைக்காதீங்க, நீங்க இப்பவே பிரதமரப்பத்தி மக்களுக்கு சொல்லலாமே” என்றான்.
“இந்த நாட்ல இருந்துட்டு  எதிர்க்கற சக்தி எனக்கில்ல, என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க சில பேர் வேற வேற இடங்களுக்கு போயிட்டாங்க. ஒரே நேரத்துல இந்த ஆளைப்பத்தி நாங்க உலகத்துக்கு சொல்லபோறோம்” என்றாள்.     
காலை சூரிய கதிர் பூமியை தொட்ட அதே சமயத்தில் இருவரும்  அகதிகளாக  அந்த நாட்டின் கடற்கரையில் காலை வைத்தார்கள். அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்றது, ஒரு காலத்தில் சிலோன் என்றும், சிறீலங்கா என்றும் இலங்கை என்றும் அழைக்கப்பட்ட இன்றைய தமிழீழ நாடு.  


Monday, November 9, 2015

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 1
வீர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் நூற்றி முப்பத்தி நான்காம் மாடியில் நின்றபடி மேலே பார்த்தான். ஓசோன் படலம் இன்னும் சில வருடங்கள்தான் தாங்கும் என்ற காரணத்தால் , நல்லா பார்த்துக்க , பல லட்சம் வருஷமா என்னை பார்த்துட்டு இருந்த நீங்க போன பின்னாடி, என்னை பார்க்க யாரும் இல்லாம அனாதையா நிற்கப்போறேன் என்றவாறு வானம் சோகமாக காட்சியளித்தது. இருநூறு மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பு தான் இந்த பகுதியில் இருப்பதிலேயே சின்னது. அருகில் முன்னூறு, நானூறு மாடிகள் கொண்ட குடியிருப்புகள் பல உள்ளன. வீர் கவலையாக நின்றிருந்தான். அவனது கவலை ஓசோன் அல்ல, அது ஓட்டை விழும் வரை அவன் இருக்கப்போவதில்லை. மனித வாழ்வே முப்பது வருடங்கள் தான். இப்பொழுதே அவனுக்கு வயது இருபது ஆகிவிட்டது. எப்படியும் இன்னும் பத்து வருடங்கள்தான் ஆயுள். அதுவும் எந்த நோயும் அண்டாமல் , விபத்துகள் எதிலும் சிக்காமல் இருந்தால். அதனால் ஓசோன் பற்றியல்ல அவன் கவலை. வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும்.
பத்து நிமிடங்கள் முன்னர் வரை சந்தோஷமாக இருந்த அவனுக்கு இடி போன்ற ஒரு செய்தி வந்தது. அது அவனுக்கு மட்டுமல்ல, அவனது குடியிருப்பு மொத்தத்துக்குமான இடி. மொத்தம் நான்காயிரம் குடும்பங்கள் இன்று நாடு வீதிக்கு வரப்போகிறது. நாமே வீட்டை மாற்ற வேண்டுமானால் ஒரு மாதம் முன்னரே அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். வீடு மாற்றுவதற்கான காரணம் அரசாங்கத்திற்கு திருப்தியளித்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். ஆனால் இன்று அரசாங்கமே இன்னும் ஒரு மணி நேரத்தில் மொத்த குடும்பங்களும் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டது.
நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டை காலி செய்ய வேண்டுமானால் குறைந்தது ஒரு நாள் பேக்கிங் செய்ய வேண்டுமாம். ஒரு நாள் தனது மூதாதையர் பற்றி அப்பா வைத்திருந்த வீடியோவைப்பார்த்து தெரிந்துகொண்டான். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மூதாதையர் குடும்பம் புதிதாக வாங்கிய Curved LED Tv க்கு பூஜை செய்த பொழுது எடுத்த வீடியோ. வீடு நிறைய பொருட்கள். அதில் சமையல் செய்வதற்கென்று ஒரு தனி அறை. அரிசி என்ற எதையோ கிலோ கணக்கில் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு துணையாக விதவிதமாக கலர் கலராக என்னென்னவோ செய்திருந்தார்கள். பருப்பாம், சாம்பாராம், ரசமாம். செடி என்று ஒன்று இருந்திருக்கிறது, அதில் இருந்து காய்கள் வருமாம். அதனைக்கொண்டு பொறியல் என்று வேறு செய்திருக்கிறார்கள். அப்பா காலத்தில் அரசாங்கமே வருஷத்திற்கு ஒரு முறை குடும்பத்திற்கு நூறு கிராம் அரிசி கொடுத்தது . ஆனால் அதனை வேகவைக்க தண்ணீர் இல்லாமல் பலரும், எப்படி செய்வது என்று தெரியாமல் பலரும் அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்து விட்டார்கள் .
இன்று அப்படி அல்ல, வாரத்திற்கு ஒரு முறை ஒரு மாத்திரை, வாயில் வைத்தவுடன் கரைந்து உள்ளே சென்று விடும். பசி என்பதே இருக்காது. புரோட்டீன், விட்டமின் , கார்போஹைடிரைட் கலந்த கலவை. அப்புறம் தாகம் எடுக்காமல் இருக்க, ஹட்ரஜன் கலந்த மாத்திரை. இது சுவாசிக்கும் பொழுது உடலுக்குள் வரும் ஆக்சிஜனில் தேவையான அளவை எடுத்துக்கொண்டு ஹைட்ரஜனுடன் கலந்து உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்குகிறது. சுத்தமான நீரை தாத்தா காலத்தில் தான் கடைசியாக குடித்தார்களாம். அதன் பின்னர் குடித்தவர் எவருமில்லை. மாத்திரைதான். உலகெங்கிலும் நிலத்தடி நீர் என்பது வற்றிப்போய் சுமார் எண்பது வருடங்கள் ஆகிவிட்டது . காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற நாடுகளில் கூட, இமாலயப்பனிமலை வெப்பம் தாங்காமல் உருகி மொத்தமும் கடலில் கலந்துவிட, அறுபது வருடங்களுக்கு முன்னர் மொத்தம் வற்றிவிட்டது . நிலத்தில் ஓடும் ஆறுகளை விட பல ஆயிரம் ஆறுகள் பூமிக்கு அடியில் ஓடுகிறது. ஆனால் அவைகளையும் மீத்தேன் கேஸ் எடுக்க, கச்சா எண்ணெய் எடுக்க, Nuclear weapon test என்று பூமியை குடைந்த குடையில் விஷமாக மாறிவிட்டது . அதன் பின்னர் கடல் நீரை குடிநீராக்கித்தான் தாத்தா காலம் வரை குடித்தார்களாம். ஆனால் பெருகிவிட்ட ரசாயன நச்சுக்களால் கடல் நீர் விஷமானதால் அதுவும் பயனற்றுப்போய்விட்டது. அருங்காட்சியகம் சென்றால் ஒரு குவளையில் வைத்திருக்கிறார்கள். கண்ணாடியை உருக்கியது போல இருக்கிறது நல்ல தண்ணீர். பார்ப்பதற்கே இப்படி இருந்தால், குடித்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்பவரெல்லாம் பேசிக்கொள்வார்கள். சுத்தமான தண்ணீரை எப்படியும் இன்னும் பத்து வருடத்திற்குள் கண்டுபிடித்து விடுவதாக உலக விஞ்ஞானிகள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள்.
சைரன் சப்தம் கேட்டு வீர் சுய நினைவுக்கு வந்தான். கீழே மிலிட்டரி வந்துவிட்டது. இனி தாமதிக்க முடியாது. எந்த காரணத்திற்காக எல்லோரையும் காலி செய்ய சொன்னார்களோ தெரியாது. எங்கு தங்க வைக்கபோகிறார்களோ தெரியாது. இனி தங்கப்போகும் இடம் இத்தனை வசதியாக இருக்குமா என்று வீர் தனது எட்டுக்கும் மூன்றுக்கு அடியில் அமைந்த வீட்டை ஏக்கமாக பார்த்துக்கொண்டே , வெளியே குதிக்க, வெளிச்சுவற்றில் அமைந்திருந்த கண்ணாடி கதவு தானாக மூடிக்கொண்டது. ஷூவில் அமைந்திருந்த கீழ் நோக்கு உந்து விசைக்கான பொத்தானை தனது உடலோடு அமைந்திருந்த ரிமோட்டில் இயக்கி பத்திரமாக தரை இறங்கினான். சிறிது நேரத்தில் நான்காயிரம் குடும்பங்களைச்சேர்ந்தவர்களும் கீழே இறங்கிவிட்டனர்.
அனைவருக்கும் என்ன காரணத்தினால் வெளியேற்றப்படுகிறோம் என்று தெரியாதா குழப்பம் ஒருபுறம் , எங்கு கூட்டி செல்வார்களோ என்ற பயம் ஒருபுறம். அரசு அதிகாரிகள் யாரும் எதுவும் காரணம் சொல்லும் நிலையில் இல்லை. ஆனால் அவர்களது முகத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு சந்தோஷம் தெரிந்தது. ஒரு வேளை சுத்தமான தண்ணீர் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அடியில் ஓடுகிறதா? அதனால் தான் காலி செய்ய சொன்னார்களா? இப்பொழுது இந்த இருநூறு மாடிகளையும் இடித்து தரை மட்டமாக்கிவிட்டு, தண்ணீர் எடுக்க போகிறார்களா? மீண்டும் அரிசி விளைவிக்க விவசாயம் செய்யப்போகிறார்களா? ஆயிரம் கேள்விகளுடன் வீர் நடந்தான். மிலிட்டரி காவலுடன் நான்காயிரம் குடும்பங்களும் சிறப்பு ரயிலில் ஏற்றப்படுவதற்காக அருகில் இருந்த நிலத்தடி ரயில் நிலையத்தை நோக்கி அழைத்துச செல்லப்பட்டனர். வீர் திரும்பிப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே அவர்கள் கண் முன்னே மொத்த கட்டிடமும் நொடியில் தரைமட்டமாக்கப்பட்டது. ஏன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவர்களுக்கு இறுதியாக ஒரு மிலிட்டரி ஆபீசர் , " உங்க நிலத்துக்கு அடியில சுத்தமான் குடி தண்ணி இருக்குதாம் , இத நான் சொன்னேன்னு யாருக்கும் சொல்லிடாதீங்க, அப்புறம் என் வேலை போயிரும் " என்றார். வீடிழந்ததை விட, அரை நூற்றாண்டிற்குப் பிறகு தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் , சாவதற்குள் அதனை ருசி பார்த்துவிடமுடியும் என்றும் ஆனந்தக்கண்ணீர் விட்டபடி அனைவரும் ரயில் ஏறினர்.
புன்னகைத்தபடி இருந்த அரசு அதிகாரியிடம் முன்னூறு மற்றும் நானூறு அடுக்குமாடிகளில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் வந்து வணங்கி "ரொம்ப நன்றி சார், அந்த சாதிக்காரப்பயலுக நம்ம சாதிக்கு பக்கத்துல குடியிருக்கறது புடிக்கல. போன வாரம் நம்ம சாதிப்புள்ளைய அந்த சாதிக்காரப் பய ஒருத்தன் கூட்டிட்டு ஓடிட்டான். காதும் காதும் வெச்ச மாதிரி ரெண்டு பேரையும் கொன்னு பொதைச்சுட்டோம். ஆனா இத வளரவிடக்கூடாதுன்னுதான் உங்க கிட்ட ஏதாவது பண்ணுங்கன்னு சொன்னோம், நீங்க மொத்த கூட்டத்தையே காலி பண்ணிட்டீங்க. ஒண்ணும் பிரச்சனை வந்துடாதில்ல " என்று கேட்க, அவர் , "அட என்னப்பா, நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, நடக்கறது நம்ம சாதிக்காரன் ஆட்சி, எவன் வந்து கேள்வி கேட்டாலும் நிலத்துல தண்ணி இருக்குன்னு தெரிஞ்சுது, அதனாலதான் காலி பண்ணவெச்சோம்னு சொல்றதுக்கு எல்லா ஆதாரத்தையும் ரெடி பண்ணியாச்சு , நாளைக்கே எவனாவது தண்ணி எங்கேன்னு கேட்டா, அட ஆராய்ச்சியில தப்பு நடக்கறது சகஜமப்பான்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கப்போறோம்" என்று சொல்லி கிளம்ப, சீக்கிரம் ஓசோனில் ஓட்டை விழ வேண்டும் என்று ஆகாயம் வேண்டிக்கொண்டது.