Friday, March 2, 2012

இன்னொரு பிம்பம்

நேற்று
நீ என் கண்ணில்
விட்டுச்சென்ற உன் பிம்பம்
பத்திரமாய் இருக்கும் நெஞ்சுக்குள்
நீ
மீண்டும் வந்து
மற்றொரு பிம்பம் தரும் வரையில்

எனக்குள்ளே....

நீ வந்தபோதும்
உன்னைக் கண்டபோதும்
தெரியவில்லை
நீ
சென்ற பின் தான்
தெரிந்தது
நீ வந்துவிட்டாய் என்று.

தீயா நீ

பற்றி எரியும் காடாக

பதறுதடி நெஞ்சம்

நீ

பார்த்துச்சென்ற

நொடியில் இருந்து

சென்னையில் நெஞ்சைத் தொட்ட மனிதர்கள்....

இந்த முறை சென்னை வந்ததில் என் நெஞ்சைத் தொட்ட மனிதர்கள் இருவர் உள்ளனர். இப்படி வெய்யில் கொளுத்தும் சென்னையிலும் அவ்வப்பொழுது மழை பெய்ய காரணமாக பல நல்ல மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்களுள் இந்த இருவரும் அடக்கம் .

ஒருவர்

பாண்டிபஜார் தணிகாச்சலம் சாலைக்கு எதிராக தள்ளு வண்டியில் பரோட்டா தோசை விற்கும் கடையருகே நின்றிருந்தேன். ஒரு பெரியவர் கடைக்கார இளைஞரிடம் இரண்டு தோசைகளும் கறியும் கேட்டார். ஆனால் அவர் கையில் இருந்ததோ இருபது ரூபாய். கடைக்காரர் பெரியவரிடம் இருபது ரூபாய்க்கு இரண்டு தோசைகள் வரும் அல்லது கரி மட்டும் வரும் , என்ன வேண்டும் என்றார் . பெரியவரோ தோசைகளும் வேண்டும் கறியும் வேண்டும் என்று கேட்டார். அது முடியாது எதோ ஒன்று வேண்டுமானால் தருகிறேன் என்று கறாராக கூறினார் கடைக்காரர். பெரியவர் எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றார். அவர் நகர்ந்ததும் அந்த இளைஞர் தனது நெற்றியில் யோசனையாக கைவைத்தபடியே நெற்றியை அழுத்தினார். மனம் கேட்காதவராக அந்த பெரியவரை தாத்தா என்று அழைத்தார். மனசு கேட்கமாட்டேங்குது தாத்தா என்றபடியே இரண்டு தோசைகளும் கறியும் கொடுத்துவிட்டு பெரியவர் கொடுத்த இருபது ரூபாயை வாங்கிக்கொண்டார்.

இரண்டாமவர்

12 B பஸ்ஸில் சாந்தோம் சென்றுகொண்டிருந்தேன். லஸ் கார்னர் அருகே ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றபோது பஸ் நடத்துனர் வெளியே எட்டிப்பார்த்து எங்க போகணும் என்று பஸ்சிற்க்காக காத்திருக்கும் பயணிகளை பார்த்து கேட்டார். அதில் ஒரு பெரியவர் பட்டினப்பாக்கம் என்றதும் வாங்க என்று கூப்பிட்டு ஏற்றிக்கொண்டார். பஸ் ஏறியதும் நடத்துனர் பட்டினப்பாக்கத்திற்க்கான டிக்கெட்டை கிழித்து பெரியவரிடம் தந்தார் . பெரியவர் தனது பர்சை எடுத்து துழாவினார். ஆனால் அதில் சில கிழிந்த, கசங்கிய காகிதங்களைத் தவிர வேறெதுவும் இல்லை. பணம் இல்லையே என்றபடி பார்த்த பெரியவர் பஸ்ஸை விட்டு இறங்க ஆயுத்தமானார் . இதைப் பார்த்த நடத்துனர் என்ன பெருசு பச ஏறும்போது ஒரு பத்து ரூவாயாவது வெச்சுக்க வேண்டாமா என்று அக்கறையாக கூறி , இந்த என்று டிக்கெட்டை பெரியவரிடம் கொடுத்தபடி நகர்ந்துவிட்டார். அரசாங்க பஸ்ஸில் கூட்டம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்று வேலைபார்க்கும் பலருக்குள் தனது பஸ்ஸில் பயணிகளை கூவிக்கூவி ஏற்றிய அவரின் மேல் முதலில் மரியாதை பிறந்தது. ஒரு பைசா குறைந்தாலும் பஸ்ஸை விட்டு இறங்கு என்று கறாராக இருக்கும் பல நடத்துனர்களுக்கிடையே பணமே இல்லாமல் வந்த பெரியவருக்கு டிக்கெட் கொடுத்த அவர் மீது அதே மரியாதை மதிப்பிற்குரிய மரியாதையாக மாறியது.

இவர்கள் இந்த முறை சென்னையில் என நெஞ்சைத் தொட்ட மனிதர்கள்.

மூன்றாமவர்

இன்னொருவரும் இருக்கிறார். அவர் நெஞ்சைத் தொட்டவர் அல்ல நெஞ்சை அள்ளியவர். ஆனால் அவரைப்பற்றி எழுத முடியாது. சஸ்பென்ஸ் .......