Tuesday, September 8, 2009

பனி


வானத்து வீதியில


வெள்ளி நிலா வாரயில


நட்சத்திரம் ஜொள்ளு விடுது


அது பனியாகி கீழே வருது

எண்ணங்கள்


நல்ல எண்ணங்கள்


வளர்பிறை ஆனால்


வாழ்க்கை


பௌர்ணமி ஆகும்


நல்ல எண்ணங்கள்


தேய்பிறை ஆனால்


வாழ்க்கை


அமாவாசை ஆகும்

Monday, September 7, 2009

அறிமுகம்

கோபம் கொப்பளிக்கும்

அப்பாவின் கண்களுக்கு

முதன் முதலாக

கண்ணீரை அறிமுகப்படுத்தியது

பாட்டியின் மரணம்

புதுமைப்பெண்


நிமிர்ந்த நன்னடையும்


நேர்கொண்ட பார்வையும் கொண்ட


பாரதி கண்ட புதுமைப்பெண்


முதன் முறையாகத் தலை குனிந்தாள்


தாலி கட்டிக்கொள்ள


பின்


நிமிர்த்தவே இல்லை


கேள்விக்குறி

முண்டாசுக் கவிஞன் போய்

மூன்று தலைமுறை ஆகிவிட்டது

அவனுக்கு

பராசக்தி காணி கொடுத்தாளா

என்பது மட்டும்

இன்றுவரை தெரியவில்லை

காற்று

ஒரு நாள்

மூச்சுக் காற்று

உள்ளே வர மறுத்தது

ஏன் என்றேன்

தேவதை இல்லாத இடத்தில்

பக்தனுக்கென்ன வேலை என்றது

உடனே

உன்னை கொண்டு என்னுள் வைத்தேன்

வந்து போய்க்கொண்டிருக்கிறது காற்று

நிலவு

அமாவாசையன்று

நிலவு வந்ததாய்

ஊரே அலறியது

வெளியே வந்து பார்த்தேன்

நீ நின்றிருந்தாய்

மீசை

ஆண்களுக்கு மீசை அழகு

என்று

ஏன் சொன்னாய்?

நம் ஊரில்

பள்ளிக்கு வரும் சிறுவர்களெல்லாம்

பென்சில் மீசை வரைந்துகொண்டு வருகிறார்கள்

பயம்

வானத்தில் இருந்து

உதிர்ந்த

தன் சிறகை எடுக்க

பூமிக்கு வந்தது பறவை

மனிதனைக் கண்டதும்

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள

மீண்டும் வானம் சென்றது

நீ பிறந்திருந்தால்

ராமாயண காலத்தில்

நீ பிறந்திருந்தால்

ராமன்

சீதைக்காக ராவணனைக் கொல்லாது

அரசாள அயோதியும் செல்லாது

உனக்கு சேவகம் புரியும்

சேவகனாகியிருப்பான்

வெட்கத்தின் மகளா!

நீ

வெட்டிப்போட்ட நகத்துண்டுகள் கூட

நான் தொட்டவுடன்

சிவந்து போயின

நீ என்ன

வெட்கத்தின் மகளா!

Sunday, September 6, 2009

கூட்டம்

நீ
படிப்பறிவுள்ள மணமகன்
தேவை என்றதால்
எங்கள் ஊர்
முதியோர் பள்ளிக்கூடங்கள் கூட
நிரம்பி வழிகின்றன

பதவி உயர்வு

பருத்தி...

செடிகளின் தலைவியானது

மனிதர்களுக்கு உடையான நாளிலிருந்து

ராணியானது

நீ உடையணிந்த நாளில் இருந்து.

ஆராய்ச்சி

உலகிலேயே

வாசனையான பூ எதுவென்று

ஆராய்ச்சி நடக்கிறதாம்

பாவம்

அவர்களுக்கு

உன் விலாசம் தெரியவில்லை போலும்

அம்முச்சி


சின்ன வயசில்


அம்மா என்னை


அம்முச்சி வீட்டில் வளர விட்டாள்


அப்பப்ப வருவாள்


அணைத்து முத்தம் தருவாள்


அக்கா தம்பியை மட்டும்


அழைத்துக்கொண்டு போவாள்


அரண்டு புரண்டு நானழுதால்


அச்சு வெல்லம் ஊட்டிவிட்டு


அடுத்தமுறை போகலாமென்று


அடித்துச் சொல்வாள் அம்முச்சி


இப்போது


அம்முச்சி விட்டுவிட்டு போய்விட்டாள்


அச்சுவெல்லம் கசக்கிறது


நெஞ்சுக் கூட்டுக்குள்


நெருஞ்சிமுள் குத்தியதுபோல்


அப்பப்ப வலியெடுக்கும்


அழுதுவிட்டால் வலி தீரும்

பாவம்

உன்னைச் சூடிக்கொள்ள

கூந்தல் இல்லையே என்று

கண்ணீர் வடிக்கின்றன

பூக்கள்

சாட்சி

கண்ணகி சிலையருகே

கனஜோராய் நடக்கிறது

கற்பு விற்பனை

நம்பிக்கை

வற்றிப்போன ஆற்றிலும்

வைராக்யமாய் தவமிருக்கின்றன

கரைகள் ரெண்டும்

நிச்சயம் ஒரு நாள்

நீர் வருமென.

கண்டுபிடிப்பு

மூடிய இமைக்குள் இருந்து

பார்த்த போதும்

இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும்

வித்யாசம் தெரிகிறது.

என்ன கொடுமை சார் இது

புரையேறும் போதெல்லாம்

யாரோ நம்மை நினைக்கிறார்களாம்

சரி

மற்ற நேரமெல்லாம்

யாருமே நினைப்பதில்லையா!

விந்தை

புவியீர்ப்பு விசைக்கு

இன்றுவரை புலப்படவில்லை

பறவை எலும்பின் ரகசியம்

புலப்பட்டால்...

பறவைகள் நடக்கும்.

நன்றி மறப்பது


கடற்கரையோரம்


நடந்த போது


கடலலையொன்று புலம்பியது


என் கால் விரல்களோடு....


மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்


உப்பிட்டவன் வீட்டில்


ஒரு மொடக்கு தண்ணீர் குடிக்க மறுக்கிறார்கள்.

உண்மை


இருளைக் கட்டிக்கொண்டுதான்


ராத்திரி வருகின்றது


அந்த உடையின் அடர்த்தியில்


பல மனிதத் தவறுகள்


தலைதுவட்டப்படுகின்றன.

காதல்

எல்லோர் மணிபர்சிலும்
ஏதோ ஒரு புகைப்படம்
இருப்பது போல
எல்லோர் இதயத்திற்குள்ளும்
இறந்துபோன ஒரு காதல்
இருக்கும்.

நானும்

நீ
நடந்து சென்றபோது
நசுங்கிச் செத்த
புழு பூச்சி எல்லாம்
சொர்க்கம் செல்கிறதாம்.
நீ எவ்வழியே வருகிறாய்.....

!!!

மூலவர் கண்திறந்து பார்த்தார்

என

ஊரெல்லாம் பேச்சு.

நீ கோவிலுக்கு போனாயா!

இன்னமும்...

மேகவண்ணக் கூந்தல்

பளபளக்கும் கன்னங்கள்

சுட்டும் விழி பார்வை

எல்லாம் முதுமையடைந்து விட்டன....

இளமையில் நீ தந்த

இதழ் முத்தம் மட்டும்

இன்றும் இனித்துக்கொண்டிருக்கிறது.

நிஜம்

ஏதுமற்றதுதான்....

ஆனால்

ஏதோ இருப்பதுபோல்

பிரமை தருவதே

வானமும் வாழ்கையும்.

பத்திரமாய்...

காய்ந்து உதிர்ந்த பூ இதழ்கள்,
சிதறிய வளையல் துண்டுகள்,
தவறவிட்ட கைக்குட்டை,
முகம் கழுவ போனபோது
பெஞ்சில் ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு,
தொலைந்து போன பேனாமூடி ,
தொலையாத அவள் பிம்பம்,
பத்திரமாய் இருக்கும் ...
இன்னொருத்தி வரும் வரை

யார்

எனக்குள்

முதலில் வந்தது

நீயா?

காதலா!

ஆச்சர்யம்!


நீ குளித்த


நீர் கலந்ததால்


கழிவுநீர்க் குழாய்கள் மட்டுமல்ல


கூவமே மனக்கிறதாம்


சென்னையில்.