Sunday, February 24, 2019

பார்த்தீனியம்
இலங்கையில் தமிழருக்கு நேர்ந்த துயரங்களை 1983 ஜூலை கலவரம் முதல் 1987ல் அமைதிப்படை சென்று நடத்திய கொடூரங்கள் வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வானதி , வசந்தன் ஆகிய பரணியின் காதல் கதையின் வழியாக வலிமையாக சொல்லும் நாவல்.
விடுதலை வேண்டி போராடும் போது விடுதலையை முக்கியமாக எண்ணாமல், பெயரெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஓரியக்கமாக இணையாமல் மூன்று நான்கு இயக்கங்களாக இயங்கியதாலும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டியதாலும், பொதுப் பகைவர் கையில் அவர்கள் நசுக்கப்பட்டார்கள் என்பதை விளங்குமாறு விளக்கும் நாவல்.
யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும்
பரணியோடும், வானதியோடும் சில ஆண்டுகள் வாழ்ந்த உணர்வு.
வசந்தனாக வாழ்ந்திருந்தால் அவனும் வானதியும் திருமணம் செய்துகொண்டு இன்று அவர்களது குழந்தைகளுக்கும் கூட திருமணம் செய்திருப்பார்கள்.
ஆர்மோனியப்பெட்டியில் அழுத்தப்படும் ஒவ்வொரு கட்டையும் ஒரு ஓசையை எழுப்புவது போல Thamizhnathy Nathy அக்காவின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் படிப்பவரின் மனதில் இருந்து ஒவ்வொரு உணர்ச்சியை எழுப்பும் சக்தி இருக்கிறது.
இலங்கையில் நடந்தது என்ன என்று அறிய ஆவல் உள்ளவர்கள் இந்த நாவலைப் படித்தால் தெளிவு பெற வாய்ப்பு உள்ளது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபடவேண்டிய, உலகம் வாசிக்கவேண்டிய முக்கியமான நாவல்.
அக்காவின் தமிழ் நடைக்கும், அவர் உவமைகளை கையாண்ட விதத்திற்கும் சில சான்றுகள்.
தண்ணீருக்கு வலிக்குமோ எனுமாப்போல இறங்கி - பக்கம் 24
பொய்யின் நூல் நுனிதான் இன்னும் கைக்கு வந்தபாடாக இல்லை - பக்கம் 42
கடல்போல் இல்லை மரம். அதன் வழங்கல் எல்லை வரையரைக்குட்பட்டது - பக்கம் 43
இரண்டு அறைகளுக்குமிடையில் இருந்த அரைச்சுவர் இரகசியங்களைக் காக்கும் திரணியற்றது - பக்கம் 44
நித்திரை இமையருகில் வந்து காத்திருந்தது போல கண்களை மூடியதும் உறங்கிப் போவார் - பக்கம் 45
கேள்வி கடலைப் போல திரும்ப திரும்ப அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது- பக்கம் 52
அவரது சமையல் முறை நாளன்று பெடியங்களெல்லாம் வயிற்றை விரித்துவைத்துக்கொண்டு சாப்பிடப் போவார்கள் - பக்கம் 58
முடிவில், குருதியனைத்தும் வடிந்து துணியால் நெய்யப்பட்டதெனத் துவண்டுபோகும் உடல் - பக்கம் 71
சாத்தியத்தின் எல்லையோ காடளவு விரிந்ததாயும் அதனளவு அச்சுறுத்துவதாயுமிருந்தது - பக்கம் 77
வெக்கையைக் குடித்த மயக்கத்தில் சுருண்டுகிடந்தன இலைகள் - பக்கம் 103
திரும்பிச் செல்வதற்கு வீடற்ற பல போராளிகளைச் சந்தித்த அனுபவம் அவருக்கு இருந்தது - பக்கம் 111
தாகம் தாகமென அவற்றை அவனது செவிகள் பருகின - பக்கம் 119
காலையில் இருந்து நூறு தடவையாகிலும் மானசீகமாகப் பயணித்துப் பழக்கிப்போயிருந்த பாதையில் அவர் சைக்கிளை மிதிக்கத் துவங்கினார் - பக்கம் 128
கிழக்கில் வெளிச்சக்கீற்றுகள் மழைக்காலத்திற்கேயுறிய தயக்கத்தோடு பரவத்தொடங்கியிருந்தன - பக்கம் 129
மனிதர்கள் பெயர்ந்துவிட்ட ஊரில் தங்க நேர்ந்துவிட்ட தெய்வங்களைப்போல நிர்கதியானவர்கள் எவருமில்லை - பக்கம் 131
அவனோ எஞ்சிய நாட்களைக் கழிப்பதற்கு சில வார்த்தைகளை வாங்கிப்போக வந்திருந்தான் - பக்கம் 155
ஆட்களில்லா ஊரில் நீர் நிறைந்த கிணறுகள் - பக்கம் 169
ஏழைகளுக்கு மற்றெல்லோரைக் காட்டிலும் பொறுமை அவசியம். அவர்கள் அவமானங்கொள்ளத் தகுதியுடையோரில்லை - பக்கம் 199
கண்களை ஒளித்துக்கொள்வதற்கான உபாயமாக அவனுடைய நித்திரை இருக்கலாம் - பக்கம் 207
அந்த அறைக்குள், வீட்டுக்காரரின் கண்ணொன்று படத்தினைப்போல சுவற்றில் தொங்கிக்கொண்டிருப்பதாக தயாபரன் உணருமளவிற்குக் கண்காணிப்பு - பக்கம் 208
ஓரிலையும் அசையாப் புழுக்கம் - பக்கம் 215
இயக்கம் எப்படி கட்டுப்பாடாக இருந்தது என்பதற்கு உதாரணமாக இந்த வரிகள் " துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டை விடுவிப்பதற்கு முன் அதன் அவசியத்தை ஒன்றுக்கு பத்துத் தடவை யோசிக்கவேண்டுமென்பதை ராதாண்ணா சொல்ல எத்தனை தடவை கேட்டிருப்பான்!"
பாதையைப் பின் தள்ளி விரையும் குதிரையின் கால்களென அவனது விழிகள் வரிகளை விழுங்கி முன்னகர்ந்தன.. - பக்கம் 225
இந்த உலகம் எல்லா சீவராசிகளுக்குமானது. பாம்புக்கும் ஓணானுக்கும் வண்டுக்கும் களைச்செடிக்கும் உம்மைப்போல வாழுற உரிமை இருக்கு. பிரயோசனமில்லாத ஒண்டை அழிக்கறதாயிருந்தா முதலிலை மனுசனைத்தான் அழிக்கோணும். அவன் சும்மா இருந்தா காணும். இந்த உலகம் சம நிலை குலையாமல் நிம்மதியா இருக்கும் - பக்கம் 227
சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகுகளிலும் சுளீரிட்டாற்போல, திலீபனுடைய சாவு எல்லோர் முற்றங்களிலும் விழுந்திருக்கிறது - பக்கம் 291
நாக்குக்கு பதிலாக நட்டுவாக்காலிதான் கொடுக்கை உயர்த்திக்கொண்டு இவளுடைய வாய்க்குள் திரிகிறதோ ? - பக்கம் 293
அவனிலிருந்து வெட்டி நீக்கப்பட்ட அங்கம் அவளுடைய ஞாபகம். தனிமை கிடைக்கும் போது அதன் வெறுமையை அவன் விரல்கள் நெருடிப்பார்க்கும் - பக்கம் 299
அமைதிப்படையின் அட்டூழியங்கள் படிக்கவே மனம் பதறும்படி உள்ளது. சீதையை சிறையெடுத்தும் கற்போடு திருப்பித்தந்த ராவணனை கையெடுத்து கும்பிட தோன்றுகிறது. கையில் ஆயுதமும் ராணுவம் என்ற அரணும் எம்தமிழரை அந்த மானங்கெட்டவர்கள் சிதைத்த விதங்கள் படிக்கவே கண்கள் நடுங்குகின்றன.
சான்றாக சில வரிகள்
இலங்கை இராணுவத்தோடு சண்டை போட்ட காலத்தில் கூட இத்தனை பாதுகாப்பின்மையை அவர்கள் உணர்ந்ததில்லை - பக்கம் 300
இந்திய அமைதிப்படையின் யுத்த டாங்கிகளால் தரையோடு தரையாக தேய்க்கப்பட்டு , கெட்டித்த குருதிக் கூழாக்கப்பட்டிருந்தனர் - பக்கம் 328
சதைக்குவியலுக்குள் மினுங்கிக்கொண்டிருந்த வெள்ளி மணிகள் நிறைந்த கால் சங்கிலியைப் பார்த்ததும் தனஞ்சயன் துக்கம் தாளாமல் அழுதான். எந்தக் குழந்தையின் கால்களில் அது சிணுங்கிக்கொண்டிதுந்ததுவோ? வாழ்வு நம்பமுடியாத வகையில் அபத்தமாகிவிட்டது - பக்கம் 329
சேலை அணிந்திருந்தால் திருமணமாகியவர் என்றெண்ணி அமைதிப்படை கண்டுகொள்ளாதாம்
அவர்கள் கிழவியளைக்கூட விட்டு வைக்கேல்லையாமெண்டு கேள்வி - பக்கம் 360
பக்கத்திலை இந்தியனார்மியின்ரை முகாம். விசாரிக்கிறமெண்டு பெடி பெட்டையளைப் பிடிச்சுக்கொண்டாந்து வெச்சு.. நெடுக நடக்கறதுதான். திரும்பவும் விசும்பல் சுழன்று சுழன்று வந்தது. யாரிடமிருந்தோ தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடுகிற விசும்பல் - பக்கம் 378
ஒரு சிறுமியின் அலறல் உலவித்திரிகிற வீடு.. அவள் மறந்தும் அந்த வீட்டின் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை - பக்கம் 381
திரு நெல்வேலி விவசாய பண்ணையைக் காட்டிச் சொன்னான் : சண்டை மும்முரமா நடக்கேக்குள்ள இந்தியனாமி இதுக்குள்ள கன சனத்தைச் சாகக்கொண்டு எரிச்சவங்கள் - பக்கம் 384
அவளுக்கு வீடு பிடித்திருந்தது. ஆனால், வளவு முழுவதும் அழிவின் அடையாளங்கள் " இஞ்சை எல்லா வீடும் இப்படித்தான். மரணமில்லாத வீட்டிலை உப்பு வாங்கிக்கொண்டு வாவெண்டு புத்தர் அனுப்பியதுபோல உங்களையும் அனுப்போணும் போல'' எனச்சிரித்தான் - பக்கம் 385
கீதபொன்கலனின் முழு கடிதமும் படித்தால் அமைதிப்படையின் அட்டீழியங்களீன் பட்டியல் கிடைக்கும்.
அமைதிப்படை.. எவ்வளவு அபத்தமான அடைமொழி - பக்கம் 387
ஜெனிபரைப்போல சின்னப் பிள்ளையைக்கூட இந்த அநியாயம் பண்ணியிருக்கிறாங்கள். அந்தப் பிள்ளைக்கு இந்த உலகத்தைப் பற்றி இனி என்ன மதிப்பு இருக்கும்? இனி எல்லாத்தையும் அவ நம்பிக்கையோடதான் பாக்கப்போகுது - பக்கம் 406
பூனைக்கண்ணன் அவளது மார்பில் கைவைத்து நீண்ட நேரமாக குண்டைத்தேடினான். எவ்வளவு முயன்றும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை - பக்கம் 410
அந்தப் பேருந்தில் இருந்த பெண்களெல்லோரும் ஒருவர் கண்களை மற்றவர் பார்ப்பதைத் தவிர்த்தார்கள் - பக்கம் 412
"சோதனை" அழுக்குத் தீரக் கிளித்தபின் தான் வானதியின் மனம் ஆறியது. விரும்பத்தகாத தொடுதலுக்குத் தன்னுடலை விட்டுக்கொடுத்துவிட்டு கையாலாகாதவளாய் அமர்ந்திருந்ததன் கொடுமையை நினைத்து வேகிற்று நெஞ்சு - பக்கம் 413
விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்துபோகக்கூடும். ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போலக் கையாளப்பட்ட அவமானத்தையும் அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்கமுடியாது. முதுமை கூடி நினைவு தடம்மாறிப் பிறழும் வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது - பக்கம் 488
ஒவ்வொரு ஈழதேசத்தினரின் மனக்குமுறலையும் இந்த வரிகள் உணர்த்தும்
இந்தத் தீவு வேறை எங்கையாவது இருந்திருக்கக்கூடாதா எண்டு எவ்வளவு தரம் நினைச்சு கவலைப்பட்டிருப்பன்! இப்பிடியொரு கேந்திர நிலையத்திலை இருக்கிறதாலைதானே எங்கடை சனம் இத்தினை கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கு.. எத்தினை சாவு!
இந்தியாக்காரன் போரான் தான். நாளைக்கே சீனாக்காரன் வருவான். அமெரிக்காக்காரன் எங்கையெண்டு காத்துக்கொண்டு நிக்கிறான். அவன் திரிகோணமலைத் துறைமுகத்துக்காக என்னவுஞ் செய்வான்- பக்கம் 502
இனப்படுகொலைகளில் கொல்லப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு வீரவணக்கம். நாவலின் முற்றுப்புள்ளியின் கீழ் என் கண்ணீர்த்துளிகள் தவிர அமைதிப்படையால் சீரழிக்கப்பட்ட ஜெனிபர்களுக்கும், சுபத்திராக்களுக்கும் ஆறுதல் சொல்வதா, மன்னிப்பு கேட்பதா என்று தெரியவில்லை. துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ஆண்களை விட துப்பாக்கி முனையில் இரையான பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமிருக்கும்.

No comments:

Post a Comment