இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 2
நடு இரவு
வீரும் கன்யாவும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் கண்ட இடத்திலேயே பொசுக்கிவிட்டு வருமாறு ராணுவத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது . கையில் லேசர் துப்பாக்கியுடன் ராணுவம் தேடுதல் வேட்டையை துவங்கியது . இவர்கள் நாட்டுக்கு செய்த துரோகத்தை பற்றி தெரிந்த இந்த ஒரு மணி நேரமாக நாட்டு பிரதமர் பைத்தியம் பிடித்தது போல ஆகிவிட்டார். இப்படி ஒரு துரோகம் செய்ய எப்படி துணிவு வந்தது அவர்களுக்கு. கடந்த பத்து வருடங்களாக அவர் ஆட்சியில் நாட்டில் காப்பாற்றப்பட்ட இறையாண்மைக்கு இப்படி ஒரு இழுக்கா. கூடாது. அவர்கள் சாகவேண்டியவர்கள். இது நிச்சயமாக அயல் நாட்டு சதிதான். இல்லை என்றால் இப்படி ஒரு இழி செயலில் அவர்கள் இறங்கியிருக்க மாட்டார்கள்.
வீர் கன்யாவை ஒரு ரயில் பயணத்தில்தான் சந்தித்தான். பார்த்த நொடியில் யாரையும் பற்றிக்கொள்ளும் அழகு . இரண்டு சென்டிமீட்டர் அளவு கொண்ட அழகிய இரண்டு கண்கள், அதில் பகலின் நடுவில் இரவு ஓட்டிக்கொண்டதைப்போல கருப்பு வெள்ளை விழிகள், இரண்டு கண்களின் நடுவில் சற்று கீழே ஐந்து கிராம் எடை கொண்ட மூக்கு, புன்னகைத்தபொழுது உறைந்து போனது போல புன்னகைத்துக்கொண்டே இருந்த உதடுகள். கணபதி ஸ்தபதி ( 20 மற்றும் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரிய சிற்பி ) பார்த்து பார்த்து செதுக்கியது போன்ற உடல் அமைப்பு. போன்ற என்ன? பார்த்து பார்த்து செய்யப்பட்டவர்கள் தானே இவர்கள் அனைவரும்.
கட்டளை வந்த இரண்டாவது நிமிடத்தில் வீரும் கன்யாவும் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது. வீர் மற்றும் கன்யாவின் Motoscat ( Motor பொருத்தப்பட்ட scating shoe, உடலை எப்படி வளைத்தாலும் கீழே விழவிடாது. மேடு பள்ளம் அனைத்திலும் சர்வ சாதாரணமாக செல்லக்கூடியது) வீட்டிலேயே இருந்தது. அதில் சென்றால் எளிதில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் விட்டுச்சென்றிருக்கிறார்கள். அதிகாரி தனது HTD ( Human Tracking Device) ஐ எடுத்து , வீரின் அடையாள எண்ஐ தேடினார். வீர் இங்கிருந்து சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் நாட்டின் எல்லையருகில் இருப்பதனை அது சமிக்ஞை மூலம் காட்டிக்கொடுத்தது. ராணுவம் அந்த திசை நோக்கி விரைந்தது.
கன்யா சோர்ந்து அமர்ந்தாள். அவளால் ஓட முடியவில்லை. அவளைத் தூக்கிக்கொண்டு ஓடும் சக்தி வீருக்கில்லை. இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் போதும். கடற்கரை. எப்படியாவது தப்பி அயல் நாடு சென்று விடலாம். வாரத்திற்கு ஒருமுறை உடல் சக்திக்கான மாத்திரை போட்டுக்கொள்ளும் நாளிது. உயிரை காப்பாற்றிக்கொள்ளும் அவசரத்தில் மாத்திரையை எடுத்து வர மறந்துவிட்டார்கள். வெளியே எங்கும் கிடைக்காது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் மட்டுமே கிடைக்கும். அங்குள்ள scanning இயந்திரத்தில் ஏறி நின்றதும், அவர்களின் அடையாள எண் ஐ கொண்டு ஹெல்த் ஹிஸ்டரியை கண்டறிந்து, உடல் எடை , வயது ஆகியவற்றை வைத்து எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு மில்லிகிராம் மாத்திரை தருவார்கள். அடையாள எண் என்றதும் தான் வீருக்கு ஞாபகம் வந்தது.
IAC.. IAC… தளர்வையும் மீறி வீர் தேடினான். கல்லோ, தகடோ, ஏதோ ஒன்று வேண்டும். சின்ன ஊசி போன்ற ஒரு வஸ்து கிடைக்க, வீர் தனது உடலில் இருந்த Identification and Authentication chip ஐ பிய்த்து எறிந்தான். கன்யாவின் தோள் தசையையும் அறுத்து, அவளது உடலில் இருந்தும் அந்த சிப்பை தூக்கி எறிந்தான். கத்தாமல் அவளது வாயை கையால் மூட,அவள் வலியால் இவனது கையை கடித்தாள். பீறிட்டு வந்த ரத்தத்தை தன் சட்டை துணியால் கட்டினான். மகாபாரதத்தில் கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்ததாக அவனது புராண அறிவு சொல்லியிருக்கிறது. ஆனால் இங்கு பிறக்கும்.. இல்லையில்லை உருவாக்கப்படும் எல்லா குழந்தைக்கும் , உருவாக்கப்பட்ட உடனே இந்த chip வைக்கப்படும். சாகும் வரை அதுதான் அவர்களுக்கு அடையாளம். எங்கு செல்லவும் அதுதான் திறவுகோல். சென்ற நூற்றாண்டைப்போல தனித்தனியாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு என்று எதுவும் வேண்டாம். இது ஒன்று போதும் நாடு சுற்றி வர. மெதுவாக இருவரும் நடக்க துவங்கினார்கள்.
அவர்கள் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் ராணுவம் அங்கு வந்தடைந்தது. சமிக்ஞை வந்த திசையில் இரண்டு IAC கள் கிடந்தன. நிச்சயமாக அவர்கள் நாட்டை தாண்டி விடுவார்கள் என்று அவருக்கு புரிந்தது. ஆனால் பிடித்துவிட வேண்டும். இல்லை என்றால் இவருக்கு கடினமான தண்டனை கிடைக்கும். அவர்கள் தப்பிப்போக ஒரு வகையில் இவர்தான் காரணம். கன்யாவிடமிருந்து கரு முட்டை சேகரிக்கச்சென்ற ஊழியன் அவள் நாளை வருமாறு சொல்கிறாள் என்று அளித்த புகார் இவரின் கவனத்திற்கு வந்தும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். நேற்றே பிடித்திருந்தால் இன்று இப்படி அலையவேண்டாம். அவர்களைப் பிடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் இது ராணுவ ரகசியத்தை விட ரகசியமாக வைக்கவேண்டிய விஷயம் . அதனால் இவரோடு வந்த ஒரு கூட்டத்துக்கும் பிரதமருக்கும் தப்பியோடியவர்களுக்கும் தவிர யாருக்கும் தெரிய கூடாது.
சற்று தூரத்தில் கடல் அலைகள் சப்தமிட்டன. வீர் கன்யாவைப் பார்த்து இனி பயமில்லை என்றவாறு புன்னகைத்தான். ஒரு காலத்துல கோழிகளை இப்படித்தான் உருவாக்கினார்களாம். கோழிக்கு முட்டை போடா மட்டும்தான் வாய்ப்பு. அடைகாக்க அல்ல. Incubator ரில் வைத்து முட்டைய குஞ்சு பொறிக்க வைத்தார்களாம் . அப்படி கோழியை தயாரித்த மனிதர்கள் , இப்போது மனிதர்களையே அப்படித்தான் தயாரிகிறார்கள் . தொப்புள்கொடி உறவு என்றால் என்னவென்றே யாருக்கும் கடந்த சில வருடங்களாக தெரியாது.
உலக நாடுகளில் எங்கள் நாட்டில் தான் அறிவாளிகள் அதிகம் என்று மார்தட்டிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நாட்டில் இப்படி. இதில் மனிதாபிமானம் , மனித ஆசாபாசங்களுக்கெல்லாம் இடமோ இல்லை.
கலை, அறிவியல், விஞ்ஞானம், வரலாறு என்று ஒவ்வொரு விஷயத்திலும் மிக உயர்ந்த இடத்துல உள்ள பெண்களையும் ஆண்களையும் தேர்ந்தெடுப்பார்கள். மிக கவனமாக எல்லா வசதிகளுடனும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அந்த பெண்கள் கரு முட்டையை மாதம் தவறாது அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். வீட்டிற்கே சென்று சேகரித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் உள்ளார்கள். எண்ணிக்கையில் ஆணும் பெண்ணும் சரி சமமாக இருக்கும் வகையிலும், எல்லா துறைகளிலும் வல்லுனராக இருக்கும்படியாகவும் கணக்கு வைத்து குழந்தைகள் அரசு நிறுவனத்தால் உருவாக்கப்படுவார்கள். யாருக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ அந்த விவரத்தை குறித்து கொடுத்து , எடுத்து வளர்க்கலாம். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது. அறிவும் திறனுமற்ற குழந்தைகள் உருவாகிவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் மிக கவனமாக இருக்கிறது.
அதனால் எக்காரணம் கொண்டும் கர்பமடைய கூடாது. அது நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும். நாட்டு முன்னேற்றத்துக்குச் செய்யும் துரோகம்.
வீரும் கன்யாவும் கடற்கரையை அடைந்தார்கள். பழக்கப்பட்டவன் போல ஒரு இடத்தில் மணலைத் தோண்டி ஒரு டிரம்மை எடுத்தான். தூக்கி கடலில் வீசி, அதன் ஒரு பக்கத்து வாயை திறந்து, அவளை அதற்குள் அமரவைத்து, தானும் அமர்ந்தான். மீண்டும் அதனை உள்ளிருந்து மூடிக்கொண்டு விசையை அழுத்த, கடலுக்குள் மூழ்கியது அந்த நீர்மூழ்கி கருவி.
பிரதமர் முன் பயத்துடன் நின்றிருந்தார் ராணுவ அதிகாரி. அவரை தன லேசர் துப்பாக்கியால் சுட, இருபது கிலோ வாட் லேசரில் பொசுங்கி சாம்பல் கூட மிஞ்சாமல் செத்தார் அதிகாரி.
“ஒருத்தி கர்பமானதுக்கா இந்த தண்டனை. ரொம்ப அதிகமாச்சே ” என்று கிசுகிசுத்த ஒரு ராணுவ வீரனிடம் இன்னொருவன் கிண்டலான புன்னகையுடன் “ யார் கர்பமானாலும் நாட்டு இறையாண்மைக்கு இழுக்குன்னு பேசறவர், அவர் ஆண்மைக்கு ஒரு இழுக்கு வந்தா விட்டுடுவார “ என்றான். முதலாமவன் புரியாமல் பார்த்தான். “ நம்ம பிரதமர் தன்னோட அதிகாரத்த பயன்படுத்தி உபயோகப்படுத்திக்கற பெண்கள்ள அவளும் ஒருத்தி. தன் கர்பத்துக்கு இவர்தான் காரணம்னு அவ சொன்ன அடுத்த நிமிடம் இவர் கட்டிக்காத்த பதவி காலி. டென்ஷன் நாட்துக்காக இல்ல, பதவிக்காக “ என்றான்.
நடுக்கடலின் அடியில் நீர்மூழ்கி பயணித்தது. வீருக்கு தன் முன்னோர் பிறந்த மண்ணில்தான் சாக வேண்டும் என்ற ஆசை. அந்த நாடு கடல் தாண்டி உள்ளது. அதனால் தப்பியோட திட்டமிட்டான். அதே வேளையில் தனக்கு தெரிந்த பெண் ஒருத்தியும் இதே யோசனையில் இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னதன் பேரில் வீர் கன்யாவை ரயிலில் சந்தித்தான்.
“ பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவீர்களா ” சிறு சந்தேகத்துடன் கன்யா கேட்டாள்.
“ எம்மேல நம்பிக்கை இல்லையா “ - வீர்
“உங்க மேல நம்பிக்கை இல்லாமலா ரெண்டு நாளைக்கு முன்னால ரயில்ல பார்த்த உங்கள நம்பி இத்தனை தூரம் வந்தேன் “
“நீங்களே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிட்டீங்க. மாறவே மாடீங்களா” என்றான்.
அவள் புன்னகைத்தாள்.
“தப்பா நினைக்காதீங்க, நீங்க இப்பவே பிரதமரப்பத்தி மக்களுக்கு சொல்லலாமே” என்றான்.
“இந்த நாட்ல இருந்துட்டு எதிர்க்கற சக்தி எனக்கில்ல, என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க சில பேர் வேற வேற இடங்களுக்கு போயிட்டாங்க. ஒரே நேரத்துல இந்த ஆளைப்பத்தி நாங்க உலகத்துக்கு சொல்லபோறோம்” என்றாள்.
காலை சூரிய கதிர் பூமியை தொட்ட அதே சமயத்தில் இருவரும் அகதிகளாக அந்த நாட்டின் கடற்கரையில் காலை வைத்தார்கள். அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்றது, ஒரு காலத்தில் சிலோன் என்றும், சிறீலங்கா என்றும் இலங்கை என்றும் அழைக்கப்பட்ட இன்றைய தமிழீழ நாடு.
No comments:
Post a Comment