இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 1
வீர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் நூற்றி முப்பத்தி நான்காம் மாடியில் நின்றபடி மேலே பார்த்தான். ஓசோன் படலம் இன்னும் சில வருடங்கள்தான் தாங்கும் என்ற காரணத்தால் , நல்லா பார்த்துக்க , பல லட்சம் வருஷமா என்னை பார்த்துட்டு இருந்த நீங்க போன பின்னாடி, என்னை பார்க்க யாரும் இல்லாம அனாதையா நிற்கப்போறேன் என்றவாறு வானம் சோகமாக காட்சியளித்தது. இருநூறு மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பு தான் இந்த பகுதியில் இருப்பதிலேயே சின்னது. அருகில் முன்னூறு, நானூறு மாடிகள் கொண்ட குடியிருப்புகள் பல உள்ளன. வீர் கவலையாக நின்றிருந்தான். அவனது கவலை ஓசோன் அல்ல, அது ஓட்டை விழும் வரை அவன் இருக்கப்போவதில்லை. மனித வாழ்வே முப்பது வருடங்கள் தான். இப்பொழுதே அவனுக்கு வயது இருபது ஆகிவிட்டது. எப்படியும் இன்னும் பத்து வருடங்கள்தான் ஆயுள். அதுவும் எந்த நோயும் அண்டாமல் , விபத்துகள் எதிலும் சிக்காமல் இருந்தால். அதனால் ஓசோன் பற்றியல்ல அவன் கவலை. வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும்.
பத்து நிமிடங்கள் முன்னர் வரை சந்தோஷமாக இருந்த அவனுக்கு இடி போன்ற ஒரு செய்தி வந்தது. அது அவனுக்கு மட்டுமல்ல, அவனது குடியிருப்பு மொத்தத்துக்குமான இடி. மொத்தம் நான்காயிரம் குடும்பங்கள் இன்று நாடு வீதிக்கு வரப்போகிறது. நாமே வீட்டை மாற்ற வேண்டுமானால் ஒரு மாதம் முன்னரே அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். வீடு மாற்றுவதற்கான காரணம் அரசாங்கத்திற்கு திருப்தியளித்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். ஆனால் இன்று அரசாங்கமே இன்னும் ஒரு மணி நேரத்தில் மொத்த குடும்பங்களும் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டது.
நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டை காலி செய்ய வேண்டுமானால் குறைந்தது ஒரு நாள் பேக்கிங் செய்ய வேண்டுமாம். ஒரு நாள் தனது மூதாதையர் பற்றி அப்பா வைத்திருந்த வீடியோவைப்பார்த்து தெரிந்துகொண்டான். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மூதாதையர் குடும்பம் புதிதாக வாங்கிய Curved LED Tv க்கு பூஜை செய்த பொழுது எடுத்த வீடியோ. வீடு நிறைய பொருட்கள். அதில் சமையல் செய்வதற்கென்று ஒரு தனி அறை. அரிசி என்ற எதையோ கிலோ கணக்கில் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு துணையாக விதவிதமாக கலர் கலராக என்னென்னவோ செய்திருந்தார்கள். பருப்பாம், சாம்பாராம், ரசமாம். செடி என்று ஒன்று இருந்திருக்கிறது, அதில் இருந்து காய்கள் வருமாம். அதனைக்கொண்டு பொறியல் என்று வேறு செய்திருக்கிறார்கள். அப்பா காலத்தில் அரசாங்கமே வருஷத்திற்கு ஒரு முறை குடும்பத்திற்கு நூறு கிராம் அரிசி கொடுத்தது . ஆனால் அதனை வேகவைக்க தண்ணீர் இல்லாமல் பலரும், எப்படி செய்வது என்று தெரியாமல் பலரும் அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்து விட்டார்கள் .
இன்று அப்படி அல்ல, வாரத்திற்கு ஒரு முறை ஒரு மாத்திரை, வாயில் வைத்தவுடன் கரைந்து உள்ளே சென்று விடும். பசி என்பதே இருக்காது. புரோட்டீன், விட்டமின் , கார்போஹைடிரைட் கலந்த கலவை. அப்புறம் தாகம் எடுக்காமல் இருக்க, ஹட்ரஜன் கலந்த மாத்திரை. இது சுவாசிக்கும் பொழுது உடலுக்குள் வரும் ஆக்சிஜனில் தேவையான அளவை எடுத்துக்கொண்டு ஹைட்ரஜனுடன் கலந்து உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்குகிறது. சுத்தமான நீரை தாத்தா காலத்தில் தான் கடைசியாக குடித்தார்களாம். அதன் பின்னர் குடித்தவர் எவருமில்லை. மாத்திரைதான். உலகெங்கிலும் நிலத்தடி நீர் என்பது வற்றிப்போய் சுமார் எண்பது வருடங்கள் ஆகிவிட்டது . காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற நாடுகளில் கூட, இமாலயப்பனிமலை வெப்பம் தாங்காமல் உருகி மொத்தமும் கடலில் கலந்துவிட, அறுபது வருடங்களுக்கு முன்னர் மொத்தம் வற்றிவிட்டது . நிலத்தில் ஓடும் ஆறுகளை விட பல ஆயிரம் ஆறுகள் பூமிக்கு அடியில் ஓடுகிறது. ஆனால் அவைகளையும் மீத்தேன் கேஸ் எடுக்க, கச்சா எண்ணெய் எடுக்க, Nuclear weapon test என்று பூமியை குடைந்த குடையில் விஷமாக மாறிவிட்டது . அதன் பின்னர் கடல் நீரை குடிநீராக்கித்தான் தாத்தா காலம் வரை குடித்தார்களாம். ஆனால் பெருகிவிட்ட ரசாயன நச்சுக்களால் கடல் நீர் விஷமானதால் அதுவும் பயனற்றுப்போய்விட்டது. அருங்காட்சியகம் சென்றால் ஒரு குவளையில் வைத்திருக்கிறார்கள். கண்ணாடியை உருக்கியது போல இருக்கிறது நல்ல தண்ணீர். பார்ப்பதற்கே இப்படி இருந்தால், குடித்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்பவரெல்லாம் பேசிக்கொள்வார்கள். சுத்தமான தண்ணீரை எப்படியும் இன்னும் பத்து வருடத்திற்குள் கண்டுபிடித்து விடுவதாக உலக விஞ்ஞானிகள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள்.
சைரன் சப்தம் கேட்டு வீர் சுய நினைவுக்கு வந்தான். கீழே மிலிட்டரி வந்துவிட்டது. இனி தாமதிக்க முடியாது. எந்த காரணத்திற்காக எல்லோரையும் காலி செய்ய சொன்னார்களோ தெரியாது. எங்கு தங்க வைக்கபோகிறார்களோ தெரியாது. இனி தங்கப்போகும் இடம் இத்தனை வசதியாக இருக்குமா என்று வீர் தனது எட்டுக்கும் மூன்றுக்கு அடியில் அமைந்த வீட்டை ஏக்கமாக பார்த்துக்கொண்டே , வெளியே குதிக்க, வெளிச்சுவற்றில் அமைந்திருந்த கண்ணாடி கதவு தானாக மூடிக்கொண்டது. ஷூவில் அமைந்திருந்த கீழ் நோக்கு உந்து விசைக்கான பொத்தானை தனது உடலோடு அமைந்திருந்த ரிமோட்டில் இயக்கி பத்திரமாக தரை இறங்கினான். சிறிது நேரத்தில் நான்காயிரம் குடும்பங்களைச்சேர்ந்தவர்களும் கீழே இறங்கிவிட்டனர்.
அனைவருக்கும் என்ன காரணத்தினால் வெளியேற்றப்படுகிறோம் என்று தெரியாதா குழப்பம் ஒருபுறம் , எங்கு கூட்டி செல்வார்களோ என்ற பயம் ஒருபுறம். அரசு அதிகாரிகள் யாரும் எதுவும் காரணம் சொல்லும் நிலையில் இல்லை. ஆனால் அவர்களது முகத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு சந்தோஷம் தெரிந்தது. ஒரு வேளை சுத்தமான தண்ணீர் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அடியில் ஓடுகிறதா? அதனால் தான் காலி செய்ய சொன்னார்களா? இப்பொழுது இந்த இருநூறு மாடிகளையும் இடித்து தரை மட்டமாக்கிவிட்டு, தண்ணீர் எடுக்க போகிறார்களா? மீண்டும் அரிசி விளைவிக்க விவசாயம் செய்யப்போகிறார்களா? ஆயிரம் கேள்விகளுடன் வீர் நடந்தான். மிலிட்டரி காவலுடன் நான்காயிரம் குடும்பங்களும் சிறப்பு ரயிலில் ஏற்றப்படுவதற்காக அருகில் இருந்த நிலத்தடி ரயில் நிலையத்தை நோக்கி அழைத்துச செல்லப்பட்டனர். வீர் திரும்பிப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே அவர்கள் கண் முன்னே மொத்த கட்டிடமும் நொடியில் தரைமட்டமாக்கப்பட்டது. ஏன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவர்களுக்கு இறுதியாக ஒரு மிலிட்டரி ஆபீசர் , " உங்க நிலத்துக்கு அடியில சுத்தமான் குடி தண்ணி இருக்குதாம் , இத நான் சொன்னேன்னு யாருக்கும் சொல்லிடாதீங்க, அப்புறம் என் வேலை போயிரும் " என்றார். வீடிழந்ததை விட, அரை நூற்றாண்டிற்குப் பிறகு தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் , சாவதற்குள் அதனை ருசி பார்த்துவிடமுடியும் என்றும் ஆனந்தக்கண்ணீர் விட்டபடி அனைவரும் ரயில் ஏறினர்.
புன்னகைத்தபடி இருந்த அரசு அதிகாரியிடம் முன்னூறு மற்றும் நானூறு அடுக்குமாடிகளில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் வந்து வணங்கி "ரொம்ப நன்றி சார், அந்த சாதிக்காரப்பயலுக நம்ம சாதிக்கு பக்கத்துல குடியிருக்கறது புடிக்கல. போன வாரம் நம்ம சாதிப்புள்ளைய அந்த சாதிக்காரப் பய ஒருத்தன் கூட்டிட்டு ஓடிட்டான். காதும் காதும் வெச்ச மாதிரி ரெண்டு பேரையும் கொன்னு பொதைச்சுட்டோம். ஆனா இத வளரவிடக்கூடாதுன்னுதான் உங்க கிட்ட ஏதாவது பண்ணுங்கன்னு சொன்னோம், நீங்க மொத்த கூட்டத்தையே காலி பண்ணிட்டீங்க. ஒண்ணும் பிரச்சனை வந்துடாதில்ல " என்று கேட்க, அவர் , "அட என்னப்பா, நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, நடக்கறது நம்ம சாதிக்காரன் ஆட்சி, எவன் வந்து கேள்வி கேட்டாலும் நிலத்துல தண்ணி இருக்குன்னு தெரிஞ்சுது, அதனாலதான் காலி பண்ணவெச்சோம்னு சொல்றதுக்கு எல்லா ஆதாரத்தையும் ரெடி பண்ணியாச்சு , நாளைக்கே எவனாவது தண்ணி எங்கேன்னு கேட்டா, அட ஆராய்ச்சியில தப்பு நடக்கறது சகஜமப்பான்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கப்போறோம்" என்று சொல்லி கிளம்ப, சீக்கிரம் ஓசோனில் ஓட்டை விழ வேண்டும் என்று ஆகாயம் வேண்டிக்கொண்டது.
No comments:
Post a Comment